சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறை இயங்கி வருகிறது. இதில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 1200க்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில், சேலம் மத்திய சிறையில் மன அழுத்தம் அதிகம் உள்ள 30 சிறைவாசிகளுக்கு அவர்களின் மன அழுத்தங்களை போக்கும் விதமாக குளிர்கால மன அழுத்த மாதம் சிறப்பு கலை நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது. குளிர்கால மன அழுத்த மாதம் என்பது வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் குளிர்காலம் என்பதால் மக்கள் வெளி இடத்திற்க்கு செல்லாமல் வீட்டுகுள்ளேயே முடங்கி இருப்பார்கள். இச்சூழ்நிலைகளில் மன அழுத்தங்கள் வருவது இயல்பாகும். அதனை சுட்டிக்காட்டும் விதமாக குளிர்கால மன அழுத்த மாதம் என்ற அடைமொழி உண்டு. எனவே சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் குளிர்கால மன அழுத்த மாதம் சிறப்பு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அமரேஷ் புஜாரி மற்றும் கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி சேலம் மத்திய சிறையில் உள்ள மன அழுத்தம் அதிகம் உள்ள 30 சிறைவாசிகள் தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளான கவிதை, பாட்டு, கட்டுரை, பல குரலில் பேசுதல் (மிமிக்கிரி) ஆகிய திறமைகளை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர். மேலும் அவர்களை மகிழ்ச்சி ஊட்டும் விதமாக பலூன் ஊதுதல் மற்றும் பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு தன்னம்பிக்கை புத்தகங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்த பிளாஸ்டிக் பக்கெட்டுகள் பரிசாக சேலம் மத்திய சிறையில் காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மன இயல் நிபுணர் வைஸ்ணவி, சேலம் மேட்டூர் அரசு மருத்துவமனையிலிருந்து மன நல மருத்துவர் விவேகானந்தன், சேலம் மத்திய சிறை துணை சிறை அலுவலர் கிருஷ்ணகுமார், நல அலுவலர் அன்பழகன், மன இயல் ஆலோசகர்கள் செல்வகுமார், மார்டின் விமல்ராஜ் மற்றும் சமூகவியல் வல்லுநர் காயத்ரி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.