மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமியின் உடல் ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் திரைத்துறையை சார்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மயில்சாமி. ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த மயில்சாமி தீவிர எம்ஜிஆர் பக்தர் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர், அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் அடிக்கடி தெரிவித்து வருவார்.
மேலும் தேவை என கேட்போருக்கு இல்லை என சொல்லாமல் உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவராகவும் மயில்சாமி திகழ்ந்து வந்தார். எம்ஜிஆர் மட்டுமல்லாமல் தீவிர சிவன் பக்தராகவும் திகழ்ந்த மயில்சாமி ஒவ்வொரு கார்த்திகை தீப விழாவையொட்டியும் திருவண்ணாமலைக்கு தவறாமல் சென்று வருவாராம். இப்படியான நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பின்னர் அதிகாலை வீடு திரும்பிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மயில்சாமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், செந்தில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று ஊர்வலமாக ஏவிஎம் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மயில்சாமி சிவ பக்தர் என்பதால் வழியெங்கும் சிவ பக்தர்கள் கைலாயிய வாத்தியங்கள் முழங்க அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் பலரும் மயில்சாமியுடனான நினைவுகளை நினைத்து கதறி அழுதனர். தொடர்ந்து இறுதிச்சடங்கு முடிந்தவுடன் வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.