நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
மன்சூர் அலிகானின் பேச்சு
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. அதில், ‘வில்லனையே பாலியல் வன்முறை செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது. த்ரிஷாவுடன் நடிக்கப்போகிறோம் என்பதால் பெட்ரூம் சீன் எல்லாம் இருக்கும் என நினைத்தேன். 150 படத்தில் நான் பார்க்காத பாலியல் வன்கொடுமை சீனா. ஆனால் த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை’ என தெரிவித்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு திரையுலகினர், ரசிகர்கள், இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கண்டனம் தெரிவித்த த்ரிஷா
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கண்டன பதிவு ஒன்றை த்ரிஷா வெளியிட்டிருந்தார். அதில், “மன்சூர் அலிகான் என்னைப் பற்றி சமீபத்தில் அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரின் பேச்சு அவமரியாதையான, பெண் வெறுப்புமிக்க, பாலியல் அத்துமீறல் குற்றமாகும்.
அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இதுவரை இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என் திரை வாழ்க்கை முழுவதும் அது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இது மாதிரியான நபர்கள் தான் மனித குலத்திற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என காட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் கடும் எதிர்ப்பை மன்சூர் அலிகானுக்கு எதிராக பதிவு செய்தனர்.
மன்சூர் அலிகானின் தன்னிலை விளக்கம்
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்ததாக வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “அய்யா' பெரியோர்களே. திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.
உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட்பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.
திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க.அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள், பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும், லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும்.
சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா.... நன்றி!” என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் தனது பேச்சு எவ்வளவு தவறானது என்பதை மன்சூர் அலிகான் உணரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.