90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநராக இருந்தவர் செல்வா. 1992ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இன்று தல என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் அஜித் அறிமுகமானது இவரின் படத்தில் தான். செல்வா பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் இயக்கத்தில் வெளியான சில சூப்பர் ஹிட் படங்களை பற்றி பார்க்கலாம்:


 



தலைவாசல் :


1992ல் வெளியான தலைவாசல் படம் தான் இயக்குநர் செல்வாவின் முதல் படம். கல்லூரி மாணவர்களுக்குள்  இருந்து வந்த அரசியல், வன்முறை, போதை பழக்கம் உள்ளிட்டவையை ஒழித்து அவர்களை நல்வழி படுத்துகிறார் கல்லூரி முதல்வர். இது தான் தலைவாசல் படத்தின் திரைக்கதை. கல்லூரி என்றால் ஜாலியான வாழ்க்கை, காதல், ராகிங் என வேறு விதமாக காட்சிபடுத்தபட்டு வந்த காலகட்டத்தில் மிகவும் துணிச்சலாக கல்லூரிகளுக்கு நடக்கும் தீய பழக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். 


இன்று மிகவும் சிறப்பான குணச்சித்திர நடிகராக இருந்து வரும் தலைவாசல் விஜய் அறிமுகமானது இப்படத்தில் தான். அதனால் தான் அவர் அப்படத்தின் அடையாளத்தோடு இன்றும் அழைக்கப்படுகிறார். கல்லூரி முதல்வராக எஸ்.பி.பி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். 


அமராவதி :


1993ம் ஆண்டு வெளியான அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அஜித். இப்படத்தின் ஹீரோயினான சங்கவிக்கும் இது தான் முதல் அறிமுகம். அப்பாவி பெண் வீட்டை விட்டு வெளியேறி ஒரு நல்லுள்ளம் படைத்த மனிதரிடம் அடைக்கலம் தேடி வருகிறாள். அஜித்துடன் காதல் வயப்படும் போது படத்தில் ஒரு ட்விஸ்ட். அதில் இருந்து மீண்டு காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் படத்தின் கதைக்களம். 


பாலபாரதியின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் அமராவதி திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் சூப்பர் ஹிட் அடித்தது. 30 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்று வரை அப்பட பாடல்கள் பிரபலமாக இருக்கின்றன. 


கர்ணா :


1995ம் ஆண்டு அர்ஜுன், ரஞ்சிதா, வினிதா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'கர்ணா'. அர்ஜுன் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து நல்ல வசூலையும் ஈட்டியது. வித்யாசாகரின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் அனைத்துமே மிக பெரிய வெற்றி பெற்றன. 


நான் அவனில்லை :


2007ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரீ மேக் என்ற ட்ரெண்டை ஆரம்பித்த வைத்த திரைப்படம் இயக்குநர் செல்வாவின் 'நான் அவன் இல்லை'. கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகர் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான 'நான் அவனில்லை' படத்தின் கதையை தழுவி எழுதப்பட்ட இப்படத்தில் ஹீரோவாக ஜீவன் நடிக்க, ஐந்து ஹீரோயின்களாக சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் அந்த ஆண்டின் வெற்றிப்படமாக அமைந்தது. 


 



பூவேலி :


1998ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் பூவேலி. 'வாங்கிக் இன் தி கிளவுட் ' என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் அப்பாஸ், கௌசல்யா , ஹீரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். செல்வா - கார்த்திக் கூட்டணியில் இப்படத்துக்கு முன்னர் வெளியான 'சிஷ்யா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது.


அதனால் அடுத்த படத்தில் நடிகர் கார்த்திக் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தும் படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என உருவானது தான் 'பூவேலி' திரைப்படம். நடிகர் கார்த்திக் திரைப்படத்தில் இப்படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. பரத்வாஜ் இசையில் இப்படத்தில் பாடல்கள் அனைத்துமே வெற்றிப்பாடல்களாக அமைந்தன. 


மேலும் ஆசையில் ஒரு கடிதம், உன்னருகே நானிருந்தால், ரோஜா வனம், ஜேம்ஸ் பாண்டு, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், ஜோர், மணிகண்டா, தோட்டா, குரு என் ஆளு, நூற்றுக்கு நூறு, நான் அவனில்லை 2, ஆணை என கிட்டதட்ட பல கமர்ஷியல் படங்களை இயக்கியுள்ள செல்வா அதன்பிறகு படங்களை இயக்கவில்லை. நிச்சயம் இது செல்வாவின் படம் என தெரியாமலேயே அவரின் பல படங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். 




மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: பகையுடன் காத்திருக்கும் இந்தியா..? பதம் பார்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா.. வெற்றி யாருக்கு..?