நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். பட விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் அவரின் சர்ச்சை பேச்சு பல நேரங்களில் பிரச்சினையை கிளப்பியுள்ளது. இப்படியான நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து அநாகரீகமான கருத்துகளை தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் கடும் கண்டனம் மன்சூர் அலிகானுக்கு தெரிவித்தனர். 


நடிகை த்ரிஷா தொடங்கி திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவிக்க, மன்சூர் அலிகான் முதலில் ஒரு விளக்கம் கொடுத்தா. அதில், த்ரிஷாவிடம் தவறான வீடியோவை காட்டியதாக கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தேசிய மகளிர் ஆணையமும் தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும் மன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. 


இதனைத் தொடர்ந்து மீண்டும் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ‘நீட் தற்கொலை, மணிப்பூர் சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தேசிய மகளிர் ஆணையம் பெரிதாக செயல்படாமல் தன்னுடைய விவகாரத்தை பெரிதாக்குவதாக குற்றம் சாட்டி தரக்குறைவாக விமர்சித்தார். நடிகர் சங்கம் தன்னிடம் விளக்கம் கேட்காமல் மன்னிப்பு கேட்க சொல்லியிருக்க கூடாது. முறைப்படி நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 


இப்படியான நிலையில் நேற்றைய தினம் (நவம்பர் 22)  நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை  சார்பில் சம்மன் வழங்கப்பட்டது. மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு அவர் இல்லாத நிலையில் மனைவியிடம் சம்மனை வழங்கினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் காவல் நிலையத்தில் ஆஜராகுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. 


இந்நிலையில் மன்சூர் அலிகான் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இன்று காவல் நிலையத்தில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.