90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர் என்றால் பலரது நினைவிற்கும் முதலில் வருபவர் மன்சூர் அலிகான் தான். பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். அதன் பின்னர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகர்களில் ஒருவராக மாறினார். அதனைத் தொடார்ந்து ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். பல படங்களைத் தயாரித்து இயக்கவும் செய்துள்ளார். அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தால் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 41 வாக்குகளே கிடைத்தன.
அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் இவர், கடந்த மாதம் அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டியதற்காக இவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மன்சூர் அலிகானுக்கு சொந்தமாக பல வீடுகள் உள்ளது. அந்த வகையில் சூளைமேடு, பெரியார் பாதையிலும் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை கட்டுவதற்கு சுமார் 2500 சதுரடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து கட்டியுள்ளார் மன்சூர் அலிகான். இதனால் தற்போது இவரது வீட்டிற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இந்தநிலையில், தனது வீட்டை மீட்கக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்பொழுது, தனது வீட்டில் வளர்ப்பு பூனை ஒன்று இருப்பதாகவும், அதை மீட்க ஒரு மணிநேரம் மட்டும் வீட்டின் கதவை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு அப்போழுது மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதி மன்றம் இன்று அனுமதியளித்தது.
ஆனால், மன்சூர் அலிகான் நான் இனி அந்த வீட்டிற்கு செல்லமாட்டேன். என் பூனை உண்வு, தண்ணீர் இல்லாமல் இறந்து விட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து இதற்கான நீதியை பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்