நடிகை த்ரிஷா(Trisha) விவகாரத்தில் நான் பேசியது பற்றி என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எப்படி அவதூறு கருத்து கூற முடியும் என நடிகர் மன்சூர் அலிகான்(Mansoor Ali Khan) கேள்வி எழுப்பியுள்ளார். 


கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் தனக்கு த்ரிஷாவுடன் நடிக்க காட்சிகள் கொடுக்கப்பட்டவில்லை என்ற அடிப்படையில் பேச தொடங்கி பல கொச்சையான கருத்துகளை தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. மன்சூர் அலிகானுக்கு திரையுலகினர் மட்டுமின்றி பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். 


நடிகை த்ரிஷாவும் மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் அளித்த விளக்கத்தில், “திரிஷாவிடம் தப்பான வீடியோவை காட்டியிருப்பதாகவும், நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறவன் என அனைவருக்கும் தெரியும்” எனவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


அதேபோல் நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தன்னுடைய செயலுக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் த்ரிஷா விவகாரத்தில் எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் கொடுக்க இன்று (நவம்பர் 21) நுங்கம்பாக்கத்தில் மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.



ஆனால் என் புகைப்படமும் அவர் புகைப்படத்தையும் சேர்த்து சேர்த்து போட்டு செய்தி போட்டுள்ளனர். ஹாலிவுட் வரை என் செய்தி சென்றுள்ளது. அதுவரை சந்தோசம்தான். என்னை பலிகடாவாக்கி நல்ல பெயர் எடுக்க நடிகர் சங்கம் முயற்சிக்கிறது.


நான் பேசியது பற்றி என்னிடம் விளம்க்கம் கேட்காமலேயே எப்படி அவதூறு கருத்து கூற முடியும்? சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன? உண்மையாக ரேப் செய்வதா? கொலை செய்யும் சீன் என்ன உண்மையாக கொலை செய்வதா? எனக்கு எதிரான அறிக்கையை நடிகர் சங்கம் 4 மணி நேரத்டில் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் துண்டை காணோம் துணிய காணோம் என்று ஓடுவீர்கள். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. மக்களுக்கு என்னப்பற்றி தெரியும். தமிழ்நாடே என் பின்னால் உள்ளது. த்ரிஷாவை நான் பாராட்டிதான் பேசுனேன். அவர்தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.