இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார்.
ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மார்ச் 31ஆம் தேதி 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் ட்ரெண்டை மாற்றி, சினிமாக்களை கிராமங்களை நோக்கி இழுத்துச் சென்று நாட்டுப்புற யதார்த்தக் கதைகளை வழங்கிய முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் லொக்கேஷன்களை செட்டை விட்டு நகர்த்தி யதார்த்த அழகியலை, ஊர்களை முன்னிறுத்திக் காட்டிய இயக்குநராக பாரதிராஜா இன்று வரை கொண்டாடப்படுகிறார்.
இவரது மகன் மனோஜ் பாரதிராஜா, கடந்த 1999ஆம் ஆண்டு தன் தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
மனோஜின் நடிப்பு பயணம்
தொடர்ந்து, சமுத்திரம், அல்லு அர்ஜூனா, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அன்னக்கொடி என தேர்ந்தெடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வந்த மனோஜ், இறுதியாக சென்ற ஆண்டு வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தார்.
நடிக்க வருவதற்கு முன் அமெரிக்காவில் தியேட்டர் ஆர்ட்ஸ் படிப்பை படித்து முடித்த மனோஜ், இயக்குனர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன் முதல் படம் குறித்து முன்னதாக மனோஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
’சுசீந்திரனுக்கு நன்றி’
மேலும், இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, தற்போது தான் இயக்கும் படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி.வி.பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கியப் பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார். இந்தப் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: Raghav Chadha - Parineeti Chopra dating : சம்திங் ராங்... பரினிதி சோப்ராவுடன் டேட்டிங் செய்யும் எம்.பி... ட்ரெண்டிங்காகும் ரைமிங் பதில்