Actor Manikandan:  ஜெய்பீம், குட்நைட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் அடுத்து வரும் படம் லவ்வர். இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் லவ்வர் படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. நடிப்பு மட்டுமில்லாமல் ஆர்.ஜே. டப்பிங் கலைஞர், உதவி இயக்குநர் என படிப்படியாக வளர்ந்து பன்முகக் கலைஞராக விளங்கும் மணிகண்டன், பீட்சா 2, விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள், அயலான் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி கொடுத்துள்ளார். 

 

இந்நிலையில் சமீபத்தில் யூட்யூப் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “நான் ஒரு மக்கு. படிக்காமல் படிச்சிட்டேன்னு பாவலா செய்வேன். எனது பிரண்ட்ஸ் படிச்சேன்னு சொல்வாங்க. அதைக் கேட்டுட்டு, நான் படித்த அறிவாளி போல் பேசிடுவேன்.  எனக்கு நடிக்க வாய்ப்பு இல்லாத போது டப்பிங் செய்துள்ளேன். டப்பிங் வேலை இல்லாத போது படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுத சென்றுள்ளேன். நான் கற்றுக் கொள்வதற்காக தான் இதை எல்லாம் செய்தேன். ஒவ்வொரு முறை அசிங்கப்படும்போதும் அதில் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் கரியரில் வளர முடியும்.

 

தோல்விக்கு தயாரானால் நமது திறமை வளர்ந்து விடும். என் வாழ்க்கையில் ரொம்ப பொன்னான நாட்கள் நான் ஆஸ்கர் மேடையில் பேசுவது தான். 10 ஆண்டுக்கு முன்னாடியே ஆஸ்கர் மேடையில் நான் பேசுவதைப் போல் ரிகர்சல் செய்து பார்த்துள்ளேன். எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்று கூட சொல்ல ரிகர்சல் செய்துள்ளேன்.  ஒரு நேரத்தில் கையில் காசே இல்லாமல் பார்க்கில் அமர்ந்து ஃபிரண்ட்ஸூடன் பேசுவேன். டீ குடிக்க கூட காசு இருக்காது, ஆனால், 80 கோடி ரூபாய்க்கு படம் எடுப்பது குறித்து பேசுவோம். அந்த தருணங்கள் மிகவும் அழகானவை. 

 

என் அம்மா தினமும் சாப்பாடு போடும்போது, அவன் பாரு ரூ.30,000 சம்பளம் வாங்கறான்னு சொல்லி அழுவாங்க. வீட்டில் இருப்பவர்களை சமாதானப்படுத்தி அவர்களை சரிப்படுத்துவதே பெரிய விஷயம். நான் யார் என்பதை தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆர்.ஜே., நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், உதவி இயக்குநர் என ஒவ்வொன்றாக தேடல் இருந்துக் கொண்டே உள்ளது. இது தான் நிலை என்று எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. நான் மெடிகல் படிக்க எண்ட்ரஸ் எக்ஸாம் எழுதி பெயில் ஆனவன். கிரிக்கெட்டராக, விண்வெளி வீரராக ஆக ஆசைப்பட்டுள்ளேன்” என பேசியுள்ளார். 

 

மேலும், ”எனக்கு அனிமேஷன் பிலிம் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கு. எனக்கு வேலையில்லாத போது என் ஃபிரண்ட்ஸ் தான் எனக்கு காசு கொடுத்து ஹெல்ப் பண்ணாங்க. சினிமாவில் நான் வளர்ந்ததுக்கு எனது நண்பர்கள் தான் காரணம்” என்றும் மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.