நடிகர் மாதவன் தான் நடிக்கும் காதல் திரைப்படங்களில் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மாதவன் தன்னை விட வயதில் மிகக் குறைந்த பெண்ணொடு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், தனது திரைப்படங்களைத் தேர்வு செய்யும் முறை குறித்தும், தான் நடிகன் ஆக விரும்பாதது குறித்தும் பேசியுள்ளார் நடிகர் மாதவன்.
கடந்த 2000ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த `அலைபாயுதே’, அதனைத் தொடர்ந்து வெளிவந்த `மின்னலே’ முதலான திரைப்படங்களின் மூலமாக பிரபலமடைந்தார் நடிகர் மாதவன். மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு, இந்தியில் வெளிவந்த `ரெஹ்னா ஹை தேரே தில் மே’ திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமான நடிகர் மாதவன் தொடர்ந்து, `தில் வில் ப்யார் வ்யார்’, `ரங் தே பசந்தி’, `குரு’, `டனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ்’ `த்ரீ இடியட்ஸ்’ முதலான திரைப்படங்களில் நடித்தார். மேலும், இந்தியில் `பனேகி அப்னி பாத்’, `ஆரோஹன்’, `கர் ஜமால்’, `சீ ஹாக்ஸ்’, `சாயா’ முதலான தொடர்களிலும் நடித்தார் நடிகர் மாதவன்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மாதவன், `என் கதாபாத்திரங்கள் என் வயதை ஒத்தவையாக இருக்க வேண்டும். வயதில் குறைந்த பெண்ணொடு ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ரொமான்ஸ் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் போது, அது என் வயதுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். உணர்வுப்பூர்வமாக அந்தக் கதை எனக்கு பிடித்தால், நான் அதில் நடிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `என் பாதையை நானே தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். திரைத்துறையில் எதையும் கணிக்க முடியாது என்பதை நான் என் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே உணர்ந்தேன். எனவே என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்பவற்றை மட்டுமே நான் செய்தேன். நான் நடிகனாக விரும்பவில்லை. மேலும், நடிப்புக்காக எந்தப் பயிற்சியும் பெறவில்லை. என் குடும்பத்தில் யாரும் திரைத்துறையில் இல்லை. எனக்கு யாரையும் தெரியாது என்ற போதும் நான் தொடர்ந்து இங்கே நீடிக்கிறேன் என்றால் நான் ஏதோ சரியாக செய்திருக்கிறேன் என்று பொருள்’ எனவும் தெரிவித்துள்ளார்.
இயக்குநராகத் தனது முதல் திரைப்படமான `ராக்கெட்ரீ’ படத்தின் வெளியீட்டுக்காக தயாராகி வருகிறார். இஸ்ரோ அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட `தி நம்பி எஃபெக்ட்’ புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நம்பி நாராயணனின் தொடக்க கால வாழ்க்கையான ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றது, விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தது, தேசத்துரோக குற்றத்திற்கு ஆளானது முதலானவற்றை இந்தப் படம் பேசவுள்ளது.
இந்தப் படத்தில் ஃப்லிஸ் லோகன், வின்செண்ட் ரயோட்டா, ரான் டோனாச்சி, சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் க்ரோவர், கார்த்திக் குமார், தினேஷ் பிரபாகர் முதலானோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர்கள் ஷாரூக் கான், சூர்யா ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வரும் ஜூலை 1 அன்று திரையரங்கங்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள `ராக்கெட்ரீ’ திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.