தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன். இவர் மணிரத்னம் இயகத்தில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கினார். அதன்பின்னர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பலரின் இதயங்களை கவர்ந்துள்ளார். அவர் தன்னுடைய ஆரம்ப கால தடைகள் மற்றும் அவர் எப்படி திரையுலகிற்கு வந்தார் என்பது தொடர்பாக ஒரு கல்யாணமாலை நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது குறிப்பிட்டுள்ளார். 


அதில், “நான் மும்பையில் இருந்த போது தங்கியிருந்த வீட்டில் ஒரு பக்கத்தில் சுவர் கூட கிடையாது. மேலும் அப்போது என்னிடம் தொலைபேசி எதுவும் இல்லை. என்னுடைய வீட்டிற்கு அருகே தங்கியிருந்த முதியவர்கள் ஒருவர் வீட்டில் தொலைப்பேசி இருந்தது. ஆகவே எனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு அந்த தொலைபேசி எண்ணை அளித்தேன். ஒருநாள் நள்ளிரவு 2 மணிக்கு அவர்கள் அந்த தொலைபேசிக்கு அழைத்து அடுத்த நாள் காலையில் படப்பிடிப்பு இல்லை என்று கூறினார்கள். அந்த சமயத்தில் முதியவர்களை தொந்தரவு செய்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 


இதைத் தொடர்ந்து நிச்சயம் ஒரு மொபைல்ஃபோன் வாங்க வேண்டும் என்று தீர்மானித்தேன். 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு மொபைல்ஃபோனை வாங்கினேன். அந்த மொபைல் வாங்கிய உடன் எனக்கு வந்த முதல் அழைப்பு ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து வந்தது. அவர் ஒரு விளம்பர படம் எடுப்பதாக கூறினார். அந்த படத்தில் நடிக்க இருந்த மாடல் ஒருவர் வரவில்லை. ஆகவே என்னை அந்த படத்தில் நடிக்க அழைத்தார். அவர் அதற்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறினார். அந்த மொபைல் போனை 30 ஆயிரம் கொடுத்து வாங்கியபிறகு எனக்கு முதல் சம்பளமே 50 ஆயிரம் கிடைத்தது. 




அத்துடன் அந்த விளம்பர படத்திற்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் வந்திருந்தார். அவர் என்னை பார்த்து நான் தமிழர் என்று தெரிந்துகொண்டு என்னுடைய படத்தை வாங்கி மணிரத்னம் இடம் கொடுத்தார். அதன்பின்புதான் தமிழ் திரைப்படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் என்னுடைய வாழ்க்கையே மாறியது” எனக் கூறியுள்ளார். 


இந்த சம்பவத்திற்கு தமிழில் அலைப்பாயுதே, மின்னலே போன்ற ஹிட் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை மாதவன் கவர்ந்தார். தற்போது கடைசியாக தமிழில் ஓடிடி தளத்தில் வெளியான மாறா திரைப்படத்தில் மாதவன் நடித்திருந்தார். தன்னுடைய மகனின் நிச்சல் பயிற்சிக்காக இவருடைய குடும்பம் மும்பையில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இன்று வெளியாகிறது எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல்