சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படம் சூர்யாவின் 40 வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பணி புரிகின்றனர்.
படம் முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்ற நிலையில், படத்தில் உள்ள இரண்டு பாடல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளிடப்பட்டன. திரைப்படத்தின் முதல் பாடலான ‘வாடா தம்பி’ ரசிகர் மத்தியல் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போன்று, ‘உள்ளம் உருகுதய்யா’ என்ற இரண்டாவது பாடலும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பழம்பெரும் பக்திப்பாடலான ‘உள்ளம் உருகுதய்யா’ பாடலின் தாக்கத்தில் இப்பாடல் உருவாகியுள்ளது. யுகபாரதியின் வரிகளில், பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீநிவாஸன், பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர்.
முன்னதாக படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதுவதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக எதற்கும் துணிந்தவன் டைட்டில் கார்டில் பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இறுதியாக இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அந்த படத்திலும் ’காந்த கண்ணழகி’ என்ற ஒரு பாடலை எழுதியிருந்த நிலையில் அதன் மூலம் சூர்யாவிற்கு பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. முன்னதாக கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்திருச்சு’, ஆதித்யா வர்மா திரைப்படத்தில் ஒரு பாடல் , இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படத்தில் , செல்லம்மா, ஓ பேபி என இரு பாடலை எழுதியிருந்தார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்