‘அலைபாயுதே’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரசிகையின் ட்விட்டிற்கு நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்
2000 ஆம் ஆண்டுகளில் ஒரே மாதிரியான காதல் படங்கள் வெளியாகி வந்து கொண்டிருந்த நிலையில், சற்று வித்தியாசமாக இளைஞர்களின் அப்போதைய ட்ரெண்டை பிடித்து மாதவன், ஷாலினியை வைத்து ‘அலைப்பாயுதே’ படத்தை கொடுத்தார் மணிரத்னம். கார்த்திக் கதாபாத்திரத்தில் அறிமுகமான மாதவன் ஸ்டைலாக ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு பைக்கில் வர ‘ என்றென்றும் புன்னகை’ என்று கிட்டாரை தெறிக்க விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்..
அவ்வளவுதான் இளசுகளின் மத்தியில் அடுத்த சில வருடங்களுக்கு ஒரே மாதவன் மேனியாவாகத்தான் இருந்தது. ஷாலினியின் கதாபாத்திரமும் அப்போது வந்த பெண் கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வேறாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தாலி மீது செண்டிமெண்ட் இல்லாமல் இருப்பது, வார்த்தை ஜாலங்களால் மாதவனை கடுப்பேற்றுவது, இறுதியில் காதலில் திளைப்பது என அந்தக்கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் நின்றது.
கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ பச்சை நிறமே’ ‘ சிநேகிதனே’ உள்ளிட்ட பாடல்களில் பி.சி. ஸ்ரீராம் தனது கேமாரா கண்களால் விருந்தளிக்க, படத்தின் இயக்குநரான மணிரத்னத்தை கொண்டாடி தீர்த்தார்கள் ரசிகர்கள். இன்றும் காதலர்கள் கூடினாலோ, அல்லது விடுமுறை நாட்களிலோ அடிக்கடி பார்க்கும் படமாக ‘அலைபாயுதே’ மாறியிருக்கிறது. சமூகவலைதளங்களிலும் அவ்வப்போது பலர் படத்தின் காட்சிகளை பதிவிட்டு அதில் நடிகர் மாதவனை டேக் செய்வார்கள்.
அந்த வகையில் இப்போது அந்தப்படத்தின் ரசிகை ஒருவர், ‘அலைபாயுதே’ படத்தில், மாதவனிடம் முதன்முறையாக ஷாலினி பேசும் வீடியோ பதிவிட்டு, ஒவ்வொரு முறை விடுமுறை கிடைக்கும் போதும் நான் ஏன் இந்தப்படத்தை பார்க்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் மாதவன்..
காரணம் கார்த்திக் என்ற பெயர் என்னுடைய ஃபேவரைட்” என்று பதிவிட்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த மாதவன், நான் சந்தோஷக்கடலில் மூழ்கி விட்டேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்