திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதிப்குமார் இன்று காலை 9 மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ணபலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார். மேலும்  வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை,  காவல்துறை , மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணித்துறை,  அரசு போக்குவரத்துக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாக பணியாற்றிய 318 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் வருவாய்த்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, வாழ்ந்து காட்டுவோம், திட்டம் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் , ஆகிய துறைகளில் சார்பில் 25 பணியாளர்களுக்கு ரூபாய் 25.41 லட்சம் மதிப்பீட்டில் ஆனா நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 




முன்னதாக சுதந்திர தின விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள முதலாம் உலகப் போர் வீரர்கள் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு 10 பள்ளிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று உயர் அலுவலர்களால் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும்  இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை  தலைவர் சந்தோஷ் குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன், காவல்துறை துணை ஆணையர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி, சுரேஷ்குமார், அன்பு, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




இதேபோல் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 76வது சுதந்திர தின விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன்  தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி அலுவலகம் முன்பு 50 அடி உயரத்தில் புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இதில் முதல் முறையாக கொடியேற்றி வைத்து மேயர் அன்பழகன் இனிப்புகளை வழங்கினார்.  மேலும் மாசற்ற முறையில் பணி புரிந்தவர்கள் மற்றும் 25 ஆண்டுகள் பணி முடிவுற்ற மாநகராட்சி பணியாளருக்கு ரொக்க தொகையும், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் குழந்தைகள் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர்    வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகரப் பொறியாளர் சிவபாதம், ஏ.பீ.நசீர் அலி தலைவர் (சார்பு நீதிபதி) வரி விதிப்பு மேல்முறையிட்டு தீர்ப்பாயம், செயற்பொறியாளர்கள் குமரேசன், பாலசுப்ரமணியன்(பொ), மண்டலத்தலைவர்கள் ஆண்டாள்ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணான், ஜெயநிர்மலா, நகர்நலஅலுவலர்(பொ) மரு.சர்மிலி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண