ராக்கெட்ரி படத்தால் நடிகர் மாதவன் வீட்டை விற்றதாக வெளியான தகவலுக்கு நடிகர் மாதவன் விளக்கமளித்துள்ளார். 


தென்னிந்திய சினிமாவில் சாக்லேட் பாய் அந்தஸ்தோடு வலம் வந்த நடிகர் மாதவன் தற்போது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் நடிப்பதை காட்டிலும் மாதவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதனை நிறைவேற்றும் விதமாக இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியான நம்பி நாராயணன் 1994 ஆம் ஆண்டு உளவு பார்த்ததாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்ட நிலையில் 1998 ஆம் ஆண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். 


ராக்கெட்ரி படம்  நம்பி நாராயணின் வாழ்க்கையை அப்படியே மாதவன் பிரதிபலித்ததாக பலரும் தெரிவித்தனர். ரஜினி உட்பட திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டினர். அதேபோல் கேன்ஸ் திரையிடப்பட விழாவில் மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சிறப்பு காட்சியாக ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரையிடப்பட்டது. இப்படத்தை அமைச்சர்கள், எம்.பி.க்கள் என அனைவரும் கண்டுகளித்தனர். 






ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் படத்தில் நம்பி நாராயணாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே கையாண்டுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், சூர்யா, ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக  நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் இந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக தெரிவித்திருந்தார். மேலும் ஆரம்பத்தில் ராக்கெட்ரி படத்தை வேறு ஒரு இயக்குநர் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விலக மாதவனே இயக்குநரானார். 


மேலும் படத்தை இயக்க மாதவன் தனது வீட்டை விற்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில், இதனை குறிப்பிட்டு இருந்தார். இதனை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்த மாதவன், தயவு செய்து என் தியாகத்தை அதிகமாக ஆதரிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ, எதையுமோ இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரியில் பணிபுரிந்த அனைவரும் கடவுள் அருளால் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். நாங்கள் அனைவரும் மிகவும் நல்ல மற்றும் பெருமையான லாபம் ஈட்டினோம் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் ராக்கெட்ரி படம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண