தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய், ரோமியோ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் மாதவன். சின்னத்திரை மூலம் திரைத்துறையில் அறிமுகமான மாதவன், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான எவர்கிரீன் திரைப்படமான 'அலைபாயுதே' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள மாதவன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். பாலிவுட்டில் 3 இடியட்ஸ் , தனு வெட்ஸ் மனு , ரங் தே பசந்தி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மாதவன். 


தேசிய விருது : 


நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் முன்னாள் விஞ்ஞானியான  நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை உருவாக்கினார். 
இப்படம் 2022ம் ஆண்டு வெளியானது. சமீபத்தில் வெளியனான 69வது தேசிய விருதுகளுக்கான பட்டியலில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் பெற்றுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாதவனுக்கு சோசியல் மீடியா மூலம் வாழ்த்துக்களை குவித்து வந்தனர். அந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கு ஒரு புதிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.     


 



தலைவராக நடிகர் மாதவன் நியமனம்: 


இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனமானது புனேவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக இருந்து வந்த நடிகர் சேகர் கபூருக்குப் பதிலாக அந்த இடத்தில் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய மந்திரி வாழ்த்து :  


இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை எக்ஸ் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் மத்திய மந்திரி அனுராக் தாகூர். 


"உங்களின் பரந்த அனுபவமும் வலுவான நெறிமுறைகளும் இந்த நிறுவனத்தை வளப்படுத்தும், நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்து உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். 


மத்திய அமைச்சரின் டீவீட்டுக்கு "கௌரவத்திற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என பதிவிட்டுள்ளார். 



நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பை அவர் சிறப்பாக செய்வார் என பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.