ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு தயாரிப்பாளரும் சன் பிச்சர்ஸ் நிறுவனருமான கலாநிதி மாறன் உயர் ரக சொகுசு காரை பரிசளித்துள்ளார். 


போர்ஷே கார் பரிசு


இன்று காலை நடிகர் ரஜினிகாந்துக்கு உயர் ரக சொகுசு காரான BMW X7 காரை கலாநிதி மாறன் வழங்கிய நிலையில், தற்போது இயக்குநர் நெல்சனுக்கு உயர் ரக போர்ஷே காரை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார். 


 






நேற்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து செக் மற்றும் பூங்கொத்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கிய நிலையில், சற்று நேரத்துக்கு முன்னர் நெல்சனுக்கு செக் வழங்கும் புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில், தற்போது நெல்சனுக்கு உயர் ரக சொகுசு காரான போர்ஷே காரை கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார்.


நன்றி தெரிவித்த நெல்சன்


ஜெயிலர் படம் 600 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து ரஜினிக்கும் நெல்சனுக்கும் மாறி மாறி கலாநிதி மாறன் பரிசளித்து வருவது கோலிவுட் வட்டாரத்தில் கவனமீர்த்துள்ளது.


இந்நிலையில், தனக்கு கார் அன்பளிப்பு கொடுத்த கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்து நெல்சன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.


“தாராள மனதுடன்  ஜெயிலரின் வெற்றிக்காக இந்த அழகான காரை எனக்கு பரிசளித்ததற்கு நன்றி. உங்களுடன் பணியாற்றியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நீங்கள் கொடுத்த செக் உண்மையிலேயே சர்ப்ரைஸ். ரஜினிகாந்த சாருக்கு நன்றி” எனப் பகிர்ந்துள்ளார்.


ரஜினி தேர்ந்தெடுத்த கார்!


நெல்சனுக்கு கலாநிதி மாறன் வழங்கியுள்ள இந்தக் கார் 1.44 கோடிகள் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  இதேபோல் இன்று காலை நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் BMW X7 காரை வழங்கியது இணையத்தில் கவனமீர்த்து வைரலானது. 


நேற்று ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கலாநிதி மாறன் காசோலை பரிசாக வழங்கிய நிலையில், அதைத்தொடர்ந்து ரஜினிக்கு  பல மாடல் கார்களை கலாநிதி மாறன் காண்பித்ததாகவும்,  அவற்றில் BMW X7 காரை ரஜினி தேர்ந்தெடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தக் கார் ரூ.1.26 கோடிகள் மதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது.  ஜெயிலர் திரைப்படம் இதுவரை ரூ.525 கோடிகளை வசூலித்துள்ளதாக  சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர்  வெளியான நிலையில், 21 நாள்களைக் கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.


தற்போது 600 கோடிகள் வசூலை ஜெயிலர் திரைப்படம் நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.