'சரவணன் மீனாட்சி' சீரியல், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் திரில்லர் திரைப்படமான 'லிஃப்ட்' படம் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒலிம்பியா மூவீஸ் நிறுவனத்தின் கீழ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான 'டாடா' படத்தில் நடித்திருந்தார். அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.    


'டாடா' கதைக்களம் :


லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த காதலர்களின் திட்டமிடப்படாத கர்ப்பம் அவர்களின் வாழ்க்கை சூழலை எப்படி மாற்றுகிறது. பிரசவத்திற்கு பிறகு கணவன் மனைவி பிரிவதும், மகனை தனியாக வளர்க்கும் ஒரு பாசமான  அப்பாவாக, யாருடைய உதவியும் இன்றி எப்படி வளர்க்கிறார் என்பதுதான் டாடா படத்தின் கதைக்களம். இப்படத்தில் நடிகர் கவின் மிகவும் முதிர்ச்சியான ஒரு நடிப்பை வெகு சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.




ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தெலுங்கில் "பா பா"  என்ற பெயரில் வெளியானது. கடந்த ஆண்டு வெளியான இப்படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 


நானியின் 'ஹாய் நான்னா' :


அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் நானி நடிப்பில் வெளியான திரைப்படம் "ஹாய் நான்னா". நானி, மிருணால் தாகூர் மற்றும் கியாரா கண்ணா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் தமிழில் வெளியான 'டாடா' படத்தின் திரைக்கதையை போலவே அமைந்து இருந்தது. 


'ஹாய் நான்னா' படத்தில் தந்தைக்கும் மகளும் இடையிலான அன்பையும் உறவையும் மிகவும் அழகாக வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. இப்படம் பான் இந்தியன் படமாக வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றது. 



நன்றி சொன்ன கவின் : 


சமீபத்தில் நடிகர் நானி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் டாடா படத்தில் நடிகர் கவினின் நடிப்பை பாராட்டி புகழ்ந்து பேசியதோடு அப்படத்தை மற்றவர்களையும் பார்க்க பரிந்துரை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த நடிகர் கவின் அதற்கு நன்றி சொல்லும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் "நான் மிகவும் மதிக்கும் நபரிடம் இருந்து என்னுடைய உழைப்புக்கு கிடைத்த இந்த பாராட்டு என்னை நெகிழ்ச்சி அடைய செய்கிறது.  மிக்க நன்றி நானி சார்" என போஸ்ட் செய்துள்ளார் நடிகர் கவின்.