நடிகர் கவின் நடித்த டாடா படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி டாடா படம் வெளியானது. இப்படத்தை கணேஷ் கே. பாபு இயக்கி இயக்குநராக அறிமுகமானார். டாடா படத்தில் கவின் ஹீரோவாகவும், அபர்ணா தாஸ் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, மாஸ்டர் இளன் அர்ஜுனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்திருந்தனர். ஜென் மார்ட்டின் இசையமைத்த டாடா படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது.
இதனிடையே இந்த படம் வெளியாகி இன்றோடு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த படத்தில் கல்லூரியில் காதலிக்கும்போது அபர்ணா தாஸ் கர்ப்பமாவதால் வேறு வழியில்லாமல் இருவரும் சேர்ந்து வாழும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் கவினின் பொறுப்பற்ற தன்மையால் குழந்தை பிறந்த நிலையில் அபர்ணா தாஸ் காணாமல் போய் விடுவார். தனது குழந்தையை தனி மனிதனாக வளர்க்கும் கவின், மீண்டும் அபர்ணா தாஸ் உடன் எப்படி இணைகிறார் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
இப்படியான நிலையில் இந்த படத்தில் தான் எடுக்க நினைத்த ஒரு காட்சி இடம்பெறாமல் போனதாக டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். அதாவது முதலில் எழுதிய கதைப்படி, ‘கவின் - அபர்ணா தாஸின் கடைசி சந்திப்பு ஹாஸ்பிட்டலில் குழந்தை பிறக்கும் காட்சியின் போது இருப்பதாக எழுதினேன். இவர்கள் இருவரும் மீட் பண்ணி அபர்ணா தாஸ் கவினை திட்டி விட்டு போகும்படி தான் காட்சி இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக கவினை அபர்ணா அடிக்கும் காட்சி எடுக்க ரிகர்சல் பார்த்து கொண்டிருந்தோம்.
அப்போது அபர்ணா தான் இதுதானே எங்கள் இருவருக்கும் கடைசி சீன் என சொன்னார்கள். அவர் அந்த மருத்துவமனை காட்சியையே மறந்து விட்டார். ஒரு போன் கால் அட்டெண்ட் பண்ணலைன்னா எவ்வளவு பிரச்சினை பார்த்தீங்களா என நக்கலாக சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அதைக்கேட்டு வியப்பாக இருந்தது. நான் எழுதிய அந்த காட்சியையே மாற்றி விட்டேன். நான் ஒருநாள் செலவு மிச்சம் என நினைத்தேன். அதேசமயம் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக ஒருவர் ஒரு காட்சியை எப்படி பார்க்கிறார் என்பது புரிந்தது” என கூறினார். உண்மையில் அந்த காட்சி தான் படத்தில் கவின் மேல் ஒரு பரிதாபத்தையும், அபர்ணா மேல் ஒரு சின்ன கோபத்தையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் இடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.