சன் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் என்றுமே மவுசு அதிகம். மற்ற தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்டில் என்றுமே முதல் ஐந்து இடங்களை சன் டிவி சீரியல்கள்தான் பெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கிய 'சிங்கப்பெண்ணே' சீரியல் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. கயல், எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா உள்ளிட்ட சீரியல்களின் ரேட்டிங் முன்னும் பின்னுமாக மாறி மாறி வருகிறது.
சன் டிவியில் புதிய சீரியல்கள் சில வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதனால் தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட உள்ளன. 'மல்லி' மற்றும் 'மெட்டி ஒலி 2 ' சீரியல் துவங்க உள்ளன என கூறப்படுகிறது. அதனால் தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல், இனியா மற்றும் Mr . மனைவி சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.
ஏற்கனவே இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல்' தொடர் கடந்த சில மாதங்களாக நேரம் மாற்றப்பட்டு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. முதலிடத்தில் இருந்து வந்த அதன் டி.ஆர்.பி ரேட்டிங் குறைய அதன் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியது சேனல். தற்போது நான்காவது, ஐந்தாவது இடத்தில் மாறி மாறி இருந்து வருகிறது எதிர்நீச்சல் தொடர். தற்போது அதன் நேரத்தை மீண்டும் மாற்றி இரவு 9.30 மணிக்கே ஒளிபரப்ப உள்ளனர். இதனால் அதன் டி.ஆர்.பி ரேட்டிங் மேலும் சரிய வாய்ப்புகள் உள்ளன.
அதே இரவு 9 மணிக்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்நீச்சல் சீரியல் நேரம் மாறினால் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு மேலும் வரவேற்பு கூடி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் குறையவும் வாய்ப்புகள் இருக்கிறது என யூகிக்கப்படுகிறது.
மேலும் தற்போது 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'இனியா' தொடர் இனி 10.30 மணிக்கும், Mr . மனைவி சீரியல் இனி மதியம் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய சீரியல்களின் வருகையால் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நேர மாற்றத்தால் சன் டிவி ரசிகர்கள் சற்று வருத்தமாக இருந்தாலும், புதிய சீரியல்களின் வருகை அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.