தமிழ் சினிமாவில் இளம் நடிகரான கவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அவர் தனது திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 


சின்னத்திரையில் கவின் 


விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் 2வது சீசன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்த அவர் 2017ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘சத்ரியன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்தார். இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பணம் எடுத்துக் கொண்டு இறுதிக்கட்டத்தில் வெளியேறினார்.


திருப்புமுனையாக அமைந்த ‘டாடா’ 


மேலும் அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான நடிகை லாஸ்லியாவுடன் காதல் என சென்றார் கவின். ஆனால் அந்நிகழ்ச்சியிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டது. அதேசமயம் ரசிகர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினுக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு  வெளியான ‘டாடா’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கவின் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். 


கல்யாண சர்ப்ரைஸ் 


இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி கவினுக்கு தந்து நீண்ட நாள் காதலியான மோனிகாவுடன் சென்னையில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள், நெருங்கிய திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இயக்குநர்கள் வெற்றிமாறன், நெல்சன், விக்னேஷ் சிவன், நடிகைகள் பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் இருக்கும் திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். 






இப்படியான நிலையில், நடிகர் கவின் தனது மனைவி மோனிகாவுடனான திருமணம் வீடியோ கிளிப்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருமணத்தில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் படத்தில் வாலியின் அற்புதமான வரிகளில்  டி.எம்.செளந்தர்ராஜன், பி.சுசீலா பாடிய ‘ஞாயிறு என்பது கண்ணாக' பாடல் ஒலிக்கிறது. மேலும் அதில், ‘‘என் தோழியை கரம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.