1992ம் ஆண்டு வெளியான 'ஆவாரம் பூ' திரைப்படத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத ஒரு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினீத் ராதாகிருஷ்ணன். வினீத் ஒரு திறமையான நடிகர் மட்டுமின்றி ஒரு தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர்.
முதல் வாய்ப்பு :
கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் 1969ம் ஆண்டு பிறந்த வினீத் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது ஆறு வயது முதல் பரதநாட்டியம் பயின்றவர். அவருடைய குருவான கலாமண்டலம் சரஸ்வதியின் கணவர் வாசுதேவன் மூலம் 1985ம் ஆண்டு வெளியான 'இடநிலங்கள்' படத்தில் அறிமுகமானார். அதன் மூலம் முதல் படத்திலேயே மாலிவுட் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு அமைந்தது. அப்படத்தில் சின்ன ரோல் என்றாலும் மிகவும் முக்கியமான ரோலில் நடித்ததால் அடுத்த படமே ஹீரோ சான்ஸ்.
ஆவாரம்பூ ஹீரோ :
இப்படி மலையாளத்தில் மிகவும் பிஸியான நடிகராக வாய்ப்புகள் குவியும் சமயத்தில் தான் தமிழில் 'ஆவாரம் பூ' படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதையும் கைப்பற்றினார். முதலில் அப்படத்தில் ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க தான் அழைப்பு வந்துள்ளது. ஆனால் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டு அப்படத்தின் ஹீரோவானார். மிக பெரிய வெற்றி படமாக அமைந்த அப்படத்தில் வினீத் நடிப்பை பார்த்த கே. பாலச்சந்தர் வினீத்தை போன் மூலம் தொடர்பு கொண்டு 'நல்லா நடிச்சு இருந்த' என பாராட்டி தன்னுடைய 'ஜாதி மல்லி' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைல்:
அடுத்தடுத்து ஜென்டில்மேன், வேதம் என அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய வினீத்துக்கு மிக பெரிய ரீச் கொடுத்த திரைப்படம் 'மே மாதம்' மற்றும் 'காதல் தேசம்'. அப்படம் வெளியான சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக இருந்தது வினீத் ஹேர் ஸ்டைல். தமிழ், மலையாளம் படங்களை போலவே தெலுங்கிலும் பிஸியான நடிகரானார் வினீத்.
சூப்பர்ஸ்டாருடன் சந்திரமுகி :
'சந்திரமுகி' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகாவுடன் நடிக்க வாய்ப்பு பெற்றதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 'ரா ரா சரசுக்கு ரா ரா...' பாடல் அவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது. அவரின் திரை பயணத்தில் ஒரு முக்கியமான படமாக சந்திரமுகி அமைந்தது.
மனைவி மகளுடன் சென்னையில் வசிக்கும் நடிகர் வினீத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். எட்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு 'சர்வம் தாள மாயம்' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். வினீத் மனைவி சென்னையில் ஒரு பரதநாட்டியப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.