சாக்லெட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கு போர் அடித்துவிட்டதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.


துல்கர் சல்மான்


ஒவ்வொரு காலத்திலும் யாராவது ஒரு நடிகர் சாக்லெட் பாயாக மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. சாக்லெட் பாய் என்கிற பெயருக்கு முதல் சொந்தக்காரர் என்றால் நடிகர் மாதவன் தான்,. அவருக்குப் பின் சித்தார்த், ஆர்யா என பல நடிகர்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்தப் பெயர் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான நடிகர் துல்கர் சல்மானுக்கு கொடுக்கப்பட்டது.


சார்லி, ஓ காதல் கண்மனி, கண்னும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களின் மூலம் பெண்கள் மத்தியில் சாக்லெட் பாயாக உருவானார். பொதுவாக சாக்லெட் பாய் என்று கொண்டாடப்அபடும் நடிகர்கள் அந்தப் பட்டத்தை  தங்களுக்கு சொந்தம் கொண்டாடுவதே வழக்கம். ஆனால் துல்கர் சல்மான் வித்தியாசமான ஒரு பதிலை தெரிவித்திருக்கிறார்.


கிங்க் ஆஃப் கோதா


கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்குப் பிறகு துல்கர் சல்மான் நடித்துள்ள வெளியாக இருக்கும்  திரைப்படம் கிங் ஆஃப் கோதா. கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்துக்கு பின் துல்கர் சல்மான்  நடிப்பில் வெளியாக இருக்கும் கேங்ஸ்டர் திரைப்படம் இது. அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.


ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து  இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். 1980களில் நடைபெறும் பீரியட் படமாக உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில், நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ளார். வருகின்ற ஓணம் பண்டிகை அன்று இந்தப்  படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் துல்கர் சல்மான் சமீபத்திய பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.


 சாக்லெட் பாயாக நடிக்க மாட்டேன்


அதில் “சாக்லெட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து எனக்கு போர் அடித்துவிட்டது. நான் இனிமேல் சாக்லெட் பாயாக நடிக்கப் போவதில்லை. தற்போது நான் நடித்திருக்கும் கிங் ஆஃப் கோதா திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமான அமைந்திருக்கிறது. அதேபோல் ஏற்கனவே வெற்றிபெற்ற படங்களின் ரீமேக்கில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய தந்தை நடித்த எந்தப் படத்தின் ரீமேக்கிலும் நான் நடிக்க மாட்டேன். மாறுபட்ட கதாபாத்திரங்களை மட்டுமே நான் இனி தேர்வு செய்து நடிப்பேன் “ என்று அவர் கூறியுள்ளர்.