சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியர்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் தோல்வி அடைந்து இருந்தாலும், லிப்ட், டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமானார். டாடா படத்தில் தனியாக குழந்தையை வளர்க்கும் தந்தையாக இருந்த கவினின் நடிப்பு பாராட்டை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் கவின் தமிழ் சினிமாவில் முக்கியமான நபராக மாறியுள்ளார். 


இதற்கு இடையே 2019ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கவின் பங்கேற்றார். பிக்பாசில் கவினுக்கு ரசிகர்கள் கிடைத்திருந்தாலும், காதல் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டார். பிக்பாசில் இருந்து வெளியே வந்த பிறகு காதல் இல்லை என்ற கவின் படங்களில் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். சில படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இந்த நிலையில் கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் 20ம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள கவின் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் ஹீரோவான பிறகே திருமணம் என பேசி வந்த கவின் இப்பொழுது தான் நல்ல வளச்சியில் இருக்கிறார். இந்த நேரத்தில் திடீர் திருமணமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 


எனினும், திருமணம் பற்றி கவின் தரப்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. திருமணம் உறுதியாகி இருந்தால் கவின் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.