பொன்னியின் செல்வன் படம் பற்றிய அப்டேட் வெளியான நிலையில் நடிகர் ஜெயராமை, நடிகர் கார்த்தி கிண்டல் செய்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில்
பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இதற்கிடையில் இந்நிகழ்ச்சிக்கு முன் படத்தில் இடம் பெறும் கேரக்டர்களை லைகா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் மற்றும் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன், பூங்குழலி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் போஸ்டரை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் இன்று ஆழ்வார்கடியன் நம்பி கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஜெயராமின் போஸ்டரை வெளியிட்டு இந்த உளவாளியின் காதுகளில் இருந்து எதுவும் தப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை குறிப்பிட்டு நடிகர் கார்த்தி, ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகை த்ரிஷாவின் குந்தவை கேரக்டர் வந்த போது அதனை கிண்டல் செய்யும் விதமாக, இளவரசி Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்! என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த த்ரிஷா Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed என தெரிவித்திருந்தார். நிச்சயம் பொன்னியின் செல்வன் நாவலை படித்திருப்பவர்களுக்கு அதிலுள்ள கேரக்டர்கள், என்ன நிகழ்வுகள் நடக்கும் என தெரிந்திருக்கும். அதேசமயம் இதுவரை நாவலை படிக்காதவர்கள் படத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆவலாக இருப்பார்கள். ஆனால் கார்த்தி குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி கேரக்டரை மட்டும் குறிப்பிட்டு பதிவிட்டு இருப்பது அவர்களுக்குள்ளான கதை தொடர்பான ட்விஸ்டை கெடுப்பதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில் இதெல்லாம் ட்விஸ்டை கெடுத்துவிடாது. பொன்னியின் செல்வனில் பல விஷயங்கள் இருக்கின்றன என ரசிகர்கள் ஆதரவு பதிவையும் பதிவிட்டு வருகின்றனர்