விழுப்புரம் மாவட்டம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு ‘புதுமைப்பெண் திட்டம்” மூலம் உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாணவியர்கள் உயர்கல்வி கற்று அனைத்துத்துறைகளிலும் தங்கள் பங்களிப்பினை செலுத்திட வேண்டும் என  வேண்டுகோள் விடுத்தார்.


தமிழ்நாடு முதல்வர்   இன்று (05.09.2022) பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து காணொளி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்” துவக்கி வைத்ததையொட்டி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மோகன்  விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இலட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்  மஸ்தான்  உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000- உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.


அமைச்சர் மஸ்தான் பேசுகையில்..,


தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவியர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்த்திடும் விதமாக உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை துவங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டம் “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயரில் துவங்கி வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் பாரதி கண்ட புதுமைப்பெண்களாக நீங்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கர்மவீரர் காமராஜர் மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர் பெண் அடிமை ஒழிக்கப்பட வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கான சம உரிமை வழங்கப்பட வேண்டும். இத்தகைய நிலையினை அடைய கல்வி ஒன்றே சிறந்த வழி என்பதை உணர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.


பெண்கள் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரையிலும் பல்வேறு சலுகைகள் என்ற அடிப்படையில் ஏழை எளிய மாணவியர்களின் கல்வி கற்கின்ற நிலை தடைபடக் கூடாது என்பதற்காகவும் தொடர்ந்து கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் தான் தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைக்கு இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள். மேலும், ஒரு சிறப்பான நிகழ்வு என்னவென்றால் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆண்டு தோறும் நாம் கொண்டாடுகின்ற வேலையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை பெருமைப் படுத்தும் நோக்கத்தோடு இத்திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது.


கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் கிராமத்திலுள்ள பெண் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருமண உதவித்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். நடுநிலைக்கல்வியில் ஆரம்பித்த இத்திட்டம் பின்னர் உயர்நிலைபள்ளி மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்கல்வி வரை இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் கிராமத்திலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் பெண்கள் உயர்கல்வி படித்தால் தான் கிராமங்கள் வளர்ச்சி பெறுவதுடன் மாணவியின் குடும்பமும் வாழ்வாதாரம் பெற்றிடுவதோடு தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வித்திடும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை அறிவித்து இன்று செயல்படுத்தியுள்ளார்கள்.


அதனடிப்படையில்  விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 54 கல்லூரியைச் சார்ந்த 3267 மாணவிகளுக்கு ரூ.39204000- (ரூபாய் மூன்று கோடி தொண்ணூற்று இரண்டு லட்சத்து நான்காயிரம்) நிதியுதவி வழங்கப்பட உள்ளது. அவற்றில் இன்று (05.09.2022) முதற்கட்டமாகவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கல்லூரியை சேர்ந்த 788 மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலர் உடன் கூடிய வரவேற்பு பெட்டக பை மற்றும் வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைத்து காணொளி வாயிலாக ,’நான் உங்களை தந்தையப்போல காக்க தயாராக உள்ளேன் நீங்கள் வாருங்கள் உயர்கல்வியை பெறுங்கள் உங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் சொந்தக்காலில் நில்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் உங்களை நீங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். பெண்கள் உயர்கல்வி கற்று ஆண்களுக்கு இணையாக அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்கிட வேண்டும் என தெரிவித்தார்.