தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. அப்பா சிவக்குமார் , அண்ணன் சூர்யா என திரை பின்னணி கொண்ட நடிகராக இருந்தாலும் , கார்த்தி தனது சொந்த உழைப்பால் முன்னேறிக்கொண்டிருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் கார்த்தி தேவ் என்ற ஒரு படம் நடித்தார். அது பலருக்கு நினைவிருக்கும்.
ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்த அந்த படத்தை தயாரித்தவர் கார்த்தியின் நெருங்கிய நண்பர்தான் . தாயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மணும் கார்த்தியும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள் . குடும்ப நண்பர்களும் கூட. நடிகர் சிவக்குமார் தனது மகன்களையோ , மகளையோ மிகவும் எளிமையாக , ஆடம்பரம் இல்லாமல் வளர்த்தார். பொதுவாக சினிமா நடிகர்களின் வாரிசு என்றால் , சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்ற வழக்கம் உள்ளது . ஆனால் நாங்கள் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள் என பல மேடைகளில் சூர்யா , கார்த்தி மட்டுமல்லாமல் நடிகர் சிவக்குமாருமே கூறியிருக்கிறார்.
இது குறித்து மேடை ஒன்றில் பகிர்ந்த நடிகர் கார்த்தி, பள்ளி செல்லும் காலத்தில் அதாவது எல்.கே.ஜியில் இருந்து நானும் லக்ஷ்மணும் நெருங்கிய நண்பர்கள் . ஒன்றாகத்தான் பள்ளிக்கு போவோம். எனது அப்பா பாக்கெட் மணி எல்லாம் கொடுக்கமாட்டார். செல்லமாக நாங்கள் வளரவில்லை. புத்தகம் எங்கே மலிவு விலையில் கிடைக்கும் , எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும், புத்தகம் எப்படி இலவசமாக கிடைக்கும் என பணத்தின் அருமையை தெரிந்துகொண்டது லக்ஷ்மண் அம்மாவிடம்தான். நான் அவங்க வீட்டில்தான் வளர்ந்தேன் என்றே சொல்லலாம். நாங்க ஒன்றாகத்தான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டோம், பஸ்ஸில் ஒன்றாக ஃபுட் போர்ட் அடிப்போம்.ஒன்றாகத்தான் பைக் வாங்கினோம் ..ஒன்றாக சைட் அடிச்சிருக்கோம். ஆனால் ஒன்றாக கல்லூரிக்கு போகவில்லை. வகுப்பில் முதல் மாணவன் , 12 ஆம் வகுப்பில் சரியான மதிப்பெண் எடுக்காததால் , லக்ஷ்மண் லயோலாவிற்கு சென்றுவிட்டார். நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்.
வாழ்க்கையில் நான் என்ன ஆகவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் அவன் வேலைக்கே சென்றுவிட்டான். ஐடி கம்பெனியில் உயர் பதவியில் இருந்தவர், சிலரை பணியை விட்டு நீக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் வேலையை உதறிவிட்டு வந்தார். அதன் பிறகுதான் தனது தாத்தா வழியில் இவரும் தயாரிப்பு துறையை கையில் எடுத்து சிங்கம் 2 படத்தை தயாரித்தார்.
நானும் அவரும் மிகுந்த கவனத்துடன் தேவ் படத்தை கையில் எடுத்தோம். என தனது நட்பு குறித்து மிகுந்த வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி. ஆனால் தேவ் படம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை . தற்போது இந்த நண்பர்கள் மீண்டும் சர்தார் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.