விருமன் படத்தில் ஏன் நடித்தேன் என்பதற்கான காரணத்தை நடிகர் கார்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது.
இதன் காரணமாக கார்த்தி, அதிதி ஊடகங்களில் விருமன் படத்தின் புரொமோஷன்களில் கலந்து கொண்டுள்ளனர். அதில் நேர்காணல் ஒன்றிற்கு அளித்துள்ள கார்த்தி அளித்துள்ள பேட்டியில் விருமன் படத்தில் ஏன் நடித்தேன் என தெரிவித்துள்ளார். அதில் நான் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் கிராமங்களை மையமாக வைத்து அதிக படம் எடுக்க சொல்கிறார்கள். கடைக்குட்டி சிங்கம் ரிலீசான போது கிராமப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களை மூட முடிவு செய்த உரிமையாளர்களின் எண்ணத்தை அது மாற்றியது. மேலும் சமீபத்தில் வந்த படங்களில் கிராமம் சார்ந்த படங்கள் மிகக் குறைவு அதனால் அதனை தேர்வு செய்தேன் என கார்த்தி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கொம்பன் படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா ஒருபோதும் ஒத்துப்போகாத அப்பா மகனைப் பற்றிய படம் குறித்து ஒரு வரி சொல்லியிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதையைக் கேட்டபோது அது நன்கு மெருகேறியிருந்தது. க்ளைமாக்ஸ் பகுதி பிடித்திருந்தது. ஒரு தந்தையாக நான் ஒவ்வொரு நாளும் குழந்தைகளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்கிறேன். குறிப்பாக விருமன் பாத்திரம் பருத்திவீரன் கேரக்டரைப் போலவே இருந்தது.
முத்தையாவின் படங்கள் சாதிப் பெருமையை உயர்த்தி எடுக்கப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, கொம்பன் படத்திற்கு கூட பல விமர்சனங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் என பிரச்சனை எழுந்தது. ஆனால் விருமன் சாதி வெறி படம் இல்லை என்று சொல்ல முடியும். அப்படி பார்த்தால் எந்த கலாச்சாரத்தையும் யாரும் படம் எடுக்க முடியாது என கார்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்