75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ம் தேதிக்கு இடையேயான நாட்களில், ஒவ்வொருவரின் வீடுகளிலும், தேசிய கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப் படுத்துங்கள் என்று மோடி கேட்டு கொண்டுள்ளார். மூவர்ண கொடி இயக்கமானது, தேசிய கொடியுடனான, நாம் கொண்டுள்ள தொடர்பை ஆழப்படுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.




வீட்டில்,அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றுவது ஒருபக்கம் என்றால் சோஷியல் மீடியாக்களிலும் தேசியக்கொடியை டிபியாகவும், கவர் போட்டோவாகவும் அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் வைத்து வருகின்றனர். தேசிய அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ட்விட்டர், பேஸ்புக் டிபியை மூவண்ணக்கொடியாக மாற்றி 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் டிபியை மூவண்ணக்கொடியாக மாற்றியுள்ளார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவே தன்னுடைய  ட்விட்டர் போட்டோவை ரஜினி மாற்றியுள்ளார். டிபியை ரஜினி மாற்றியபிறகு அவரது ரசிகர்கள் பலரும் தங்களது டிபியை மாற்றி வருகின்றனர்.


கன்னியாகுமரி..


இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் டெல்லியில் இருப்பது போல் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு மாநிலங்களவை எம்.பி., விஜயகுமார் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பில் 147.60 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பம் அமைத்துள்ளனர்.




அதில் இன்று 48 அடி நீளமும் 32 அடி உயரமும் கொண்ட தேசியக்கொடியை தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்றினார். இதில் மாநிலங்களவை எம்.பி., விஜயக்குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், நயினார் நாகேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி விடுமுறையில் குமரி மாவட்டம் வந்துள்ள ராணுவ வீரர்கள் கையில் கொடி வைக்கப்பட்டிருந்தது, தொடர்ந்து மின்சார இயந்திரம் மூலம் கொடி ஏற்றப்பட்டது. தமிழகத்தில் இதுவே மிகப்பெரிய கொடிக்கம்பம் ஆகும். வருடத்தின் எல்லா நாட்களும் இரவும் பகலுமாக பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விழுப்புரம்..


விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் அருகே, செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமாக சிறுதாமூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிப்படை தொழிலான விவசாயத்தை முற்றிலும், நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
 
இதில் பூக்கள் காய்கறிகள்  என நெற்பயிரின் சார்ந்து கிராம மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதியில் இருப்பதால், அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தங்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகாலமாக தினந்தோறும் காலை 8.30. மணிக்கு தவறாமல் தேசியக் கொடியை ஏற்றி கொடிக்கம்பத்திற்கு வீரவணக்கம் செலுத்தி, நாட்டுப்பண் தேசிய கீதம் இசைத்து சல்யூட் அடித்து செல்வது இந்த கிராம மக்களின் வாடிக்கையாக உள்ளது.