சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. இரும்புத்திரை, ஹீரோ படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.






இத்திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. பிரபல ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.  இதுவரை, இவர் திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வந்த நிலையில் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.


சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர் மத்தியில் கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று இத்திரைப்படம் பற்றிய அடுத்த அப்டேட் வெளியானது. கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 10-ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக, கடந்த ஜூன் 11-ம் தேதி நடிகர் கார்த்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சினிமா பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல, நடிகர் கார்த்தியும் தான் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.






நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்தது. அந்த பரவல் தற்போது ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான புரிதல் காரணமாக முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாற தொடங்கி பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர்.