நடிகை புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் பரணிதரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.


திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியும், கட்டாயக் கருக்கலைப்பு செய்தும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக  மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் மணிகண்டனின் உதவியாளர் பரணிதரன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் பரணிதரன் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பரணிதரன் தரப்பில், சமரசத்துடன் செல்லும்படி மணிகண்டன் தரப்பிலிருந்து நடிகையின் தந்தையிடம் பேசியதற்காக தன் மீது மிரட்டல் விடுத்ததாக  வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், நடிகையை அறிமுகம் செய்யப்பட்டதை தவிர வேறு ஏதும் செய்யவில்லை என  தெரிவிக்கப்பட்டது.


காவல்துறை தரப்பில், மணிகண்டன் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதால் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மணிகண்டனிடம் பரணிதரன் நடிகையை அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளதாகவும், மற்ற குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதால் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதே போல் மணிகண்டன் தரப்பிலும் முன்ஜாமின் கேட்கப்பட்டுள்ளது. அந்த மனுவும் விசாரணைக்கு வர உள்ளது. 


 


இவ்வழக்கில் தொடர்புடைய முந்தைய செய்திகளை அறிய: