தமிழ் சினிமாவில் மனித உறவுகளுக்குள் இருக்கும் பல்வேறு சிக்கல்களை அதன் பரிமாணங்களை திரைப்படமாக காட்சி படுத்துவதில் முத்திரை பதித்தவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். சர்ச்சையான திரைக்கதையாக இருந்தாலும் அதில் கலாச்சாரத்தை எந்த வகையிலும்  பாதிக்காத வண்ணமாக திரைப்படமாக்குவதில் கைதேர்ந்தவர். அப்படி இயக்குநர் சிகரத்தின் அக்மார்க் முத்திரை படமாக வாழ்க்கையில் சந்திக்கும் புதிர்களுக்கு விடையாக அமைந்த "புது புது அர்த்தங்கள்" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



இசை மீது தீராத காதல் கொண்ட அற்புதமான மட்டுமின்றி அழகான  பாடகன் பொசஸிவ்னெஸ் பெருகி வழியும் மனைவியிடம் சிக்கி கொண்டு தவிக்கும் கதை தான் 'புது புது அர்த்தங்கள்'. தனக்கு பிடித்ததை யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது என்ற குணமும் அத்தோடு பணத்திமிரும் சேர்ந்து இருக்கும் ஒரு பெண் தன்னுடைய கணவன் மீது கொண்டுள்ள வெறித்தனமான அன்பு எல்லையை கடந்ததால் சந்தேகம், வெறுப்பு, வன்மம் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதுவே டார்ச்சராக மாறிவிகிறது. 


மனைவியிடம் தினம் தினம் டார்ச்சரை அனுபவிக்க முடியாமல் ஊரைவிட்டே ஓடுகிறான் பாடகன் மணிபாரதி. தப்பித்து செல்லும் போது அந்த பயணத்தில் அறிமுகமாகிறாள் கணவனால் கொடுமையை அனுபவித்து அவனிடம் இருந்து தப்பித்து செல்லும் இளம் பெண் ஜோதி. இருவரும் ஒரே மாதிரியான பிரச்சினையை சந்தித்ததால் அவர்கள் இருவர் இடையிலும் ஒரு சிநேகம் ஏற்படுகிறது. 


கணவன் மீது வெறித்தனமான அன்பை வைத்து இருந்த கௌரிக்கு அவர்களின் காதல் விவகாரம் தெரியவர ஆத்திரத்தில் ருத்ர தாண்டவம் ஆடுகிறாள். விவாகரத்து வரை சென்ற அவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன ட்விஸ்ட் காத்திருந்தது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். 


கீதா, ரகுமான், சித்தாரா இவர்கள் மூவருக்கும் இடையில் நடக்கும் வெவ்வேறு மன கொந்தளிப்பை அழகாக தங்களின் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி திகைக்க வைத்தனர். இடையில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதை கனக்க செய்தார்கள் பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் சௌகார் ஜானகி தம்பதி. 


 



புகழின் உச்சியில் இருந்த ஒரு பாடகன் அனைத்தையும் வீசி எரிந்து விட்டு ஒரு சராசரி மனிதனாக தனக்கு பிடித்த வாழ்க்கையை தனது மனதோடு ஒத்துப்போகும் ஒரு பெண்ணோடு சிறிது காலமெனும் சந்தோஷமாக வாழ்ந்த அந்த வாழ்க்கையை அத்தனை யதார்த்தமாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் ரகுமான். குடும்ப பாங்கான சிரித்த முகமாக தன்னுடைய கேரக்டருக்கு நியாயம் செய்து இருந்தார் சித்தாரா. இவர்கள் இருவரின் நடிப்பையும் மிஞ்சி விட்டார் பிடிவாதக்காரியாக கணவனை உச்சக்கட்ட அளவுக்கு டார்ச்சர் செய்த கீதா. இப்படி ஒரு மனைவி மட்டும் நமக்கு அமைந்து விடக்கூடாது என்ற எண்ணம் பார்க்கும் ஒவ்வொரு ஆணுக்கும் ஏற்படும் அளவுக்கு அசத்தலாக நடித்து இருந்தார். விவேக், ஜனகராஜ், ஜெயசித்ரா என அனைவரின் நடிக்கும் படத்திற்கு கணம் சேர்த்தது.  


 



‘கேளடி கண்மணி’, ‘கல்யாண மாலை’, ‘குருவாயூரப்பா’, 'எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்’ என அனைத்து பாடல்களின் மூலமும் இசையில் ராஜாங்கம் செய்து இருந்தார் இளையராஜா. பாலச்சந்தர் - இளையராஜா கூட்டணியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் ஆல்பங்கள் வெளிவந்து இருந்தாலும் அவர்கள் கூட்டணியில் உருவான கடைசி படம் இதுதான். 


34 ஆண்டுகளை கடந்த பின்பும் பாலச்சந்தரின் படைப்பால் மட்டுமே அதே  ஸ்வாரஸ்யத்தை சிறிதும் இழக்காமல் அதே ப்ரெஷ் பீலுடன் கொடுக்க முடியும்.