கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக படத்தின் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வனில் நடித்துள்ள நடிகர்கள் அவ்வப்போது கதாபாத்திரமாகவே மாறி ட்வீட் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு வந்தியதேவன் கதாபாத்திரமாக மாறி நடிகர் கார்த்தி நடிகர் விக்ரமின் பதிவிற்கு ரீ- ட்வீட் செய்தார். அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் இலங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me.” என்று பதிவிட்டிருந்தார்.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. அதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடலின் மேக்கிங், ஐமேக்ஸ் திரை வடிவில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி 2 ஆம் பாடலான சோழா சோழா பாடல் வெளியானது என தொடர்ந்து ரசிகர்களை ஒரு எதிர்ப்பார்ப்பிலே வைத்தது.
இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய இரண்டையும் பிரபல ஓடிடி நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பிரபல நிறுவனம் அமேசான் நிறுவனமாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதே போல இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் ஒரு மிகப்பெரிய தொகைக்கு சன் டிவியால் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.