நடிகர் டி.ராஜேந்தரின் 'இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்' செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மேலும் 21 கட்சிகள் செயல்படாத கட்சிகள் என இந்திய தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது


சினிமாவில் கொடிகட்டிப்பறந்த டி ராஜேந்தர் அரசியலிலும் தன்னுடைய இருப்பை காட்ட நினைத்தார். ஒருகாலத்தில் திமுகவில் முக்கிய நபராகவே பார்க்கப்பட்டார் டிஆர். சினிமாத்துறையை சேர்ந்தவராக இருந்தாலும் எம்ஜிஆரையே கடுமையாக எதிர்த்து திமுகவின் கவனிக்கப்பட்ட டிஆர் பின்னர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு கொண்டார். தான் ஒரு முக்கிய புள்ளி என நினைத்துகொண்டிருந்த நேரத்தில் 1989ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்காமல் ஒதுக்கியது திமுக. இதனால் கோபமடைந்த டிஆர் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற கட்சியை அப்போது தொடங்கினார்.  


1991ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்று தோற்றார். அந்த நேரத்தில் திமுகவில் இருந்து வைகோ வெளியேற மீண்டும் டி ஆர் திமுகவில் இணைய வாய்ப்பு வந்தது. தனக்கான இடம் வந்ததாக மீண்டும் திமுக சென்ற டிஆர் எம்.எல்.ஏவும் ஆனார்.  மீண்டும் கருத்து வேறுபாடு தலைதூக்க 2001ம் ஆண்டு தேர்தலில் சீட் கொடுக்காமல் ஒதுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் கட்சியை தொடங்க திட்டமிட்ட டிஆர், 2004ம் ஆண்டு  இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.


உடல் நலக்குறைவு..


நடிகரும்,இயக்கனருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 14 -ம் தேதி அமெரிக்கா சென்றார்.ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர் ஜூலையில் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் பேசிய டிஆர், ''டி.ராஜேந்தர் என்று சொன்னால் தன்னம்பிக்கை என்பார்கள் ஆனால் நான் இந்த இடத்தில் நிற்பதற்கு கடவுள் நம்பிக்கை தான் காரணம். என் மீது அன்பும் மனித நேயமும் வைத்த தமிழக மக்கள் ரசிகர்களுக்கு நன்றி.இவர்களுடைய பிரார்த்தனையின் பலன் தான் எனக்கு சிகிச்சை நல்ல விதத்தில் முடிந்து பழைய தெம்போடு உணர்வோடு தாய் மண்ணுக்கு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டிலேயே சிகிச்சை போதும் என்றேன் ஆனால் என் மகன் அமெரிக்காவில் சிகிச்சைக்கு வலியுறுத்தியதால் சென்றேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அமெரிக்காவுக்கு சென்றேன். அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கத்தினர் மிகுந்த அன்பை காட்டினார்கள். நன்றாகிவிட்டது என்னுடைய இதயம் நான் எதிர்கொண்டு இருப்பது உதயம்.அமெரிக்கா செல்ல உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி என்றார்