Kaithi 2 : கூலி ஓவர்...கைதி 2 க்கு தயார்...லோகேஷ் கனகராஜை சந்தித்து காப்பு பரிசளித்த கார்த்தி
Kaithi 2 : லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து காப்பு பரிசளித்துள்ளார்

கைதி 2
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் நேற்று மார்ச் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை கூலி படக்குழுவினர் கொண்டாடினார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் அடுத்தபடியாக கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்க இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸின் தொடக்கமாக கைதி 2 படம் அமைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்து அவருக்கு காப்பு அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் கைதி 2 படத்தின் அப்டேட்டை விரைவில் எதிர்பார்க்கலாம்
எல்.சி.யு
எல்.சி.யு வில் இதுவரை கைதி , விக்ரம் , லியோ ஆகிய மூன்று படங்கள் இடம்பெற்றுள்ளன. கார்த்தி , கமல் , சூர்யா , விஜய் , ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்கள் இதுவரை எல்.சி.யுவில் இணைந்துள்ளார்கள். இது தவிர்த்து எல்.சி.யுவின் பகுதியாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படமும் உருவாக இருக்கிறது. விஜய் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள நிலையில் அவரைத் தவிர்த்து கைதி 2 திரைப்படத்தில் மற்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். இதில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து நடிப்பது குறித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
கூலி
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் ரஜினி , சத்யராஜ் , நாகர்ஜூனா , ஸ்ருதி ஹாசன் , உபேந்திரா , செளபின் சாஹிர் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கூலி படத்தை ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.