கார்த்தி


தனித்துவமான படத் தேர்வுகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன் , பையா , நான் மகான் அல்ல  என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆக்‌ஷன் , ரொமான்ஸ் , ஃபேமிலி சப்ஜெக்ட் என, தான் தேர்வு செய்யும் கதைகள் எல்லா தரப்பு ரசிகர்களுக்குமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.

Continues below advertisement


நடிகர் கார்த்திக்கு என்று தனி ரசிகர் அமைப்புகள் நடத்தப் பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நடிப்பு தவிர்த்து தென் இந்திய நடிகர் சங்கத்தில் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார் கார்த்தி.


இந்நிலையில் வரும் மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். எல்லா ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.


கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்


வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்களால் தமிழகம் முழுக்க 300-க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றன. சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.


முதலாவதாக மே 12 ஆம் தேதி (நேற்று) சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.


இதை தொடர்ந்து மே-19, மே-26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம், நீர்மோர் வழங்குதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் வழங்குதல், விதைப்பந்துகள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக மே 25-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரத்த தானம் மற்றும் உடல் தானம் செய்ய இருக்கிறார்கள்.


தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இரத்த தானம் செய்ய இருக்கிறார்கள். நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் செயலை கண்ட பொது மக்கள் பலரும் கார்த்தியையும் ரசிகர்களையும் வாழ்த்தி பாராட்டி வருகிறார்கள்


கார்த்தி நடித்து வரும் படங்கள்


காதலும் கடந்து போகும் , சூது கவ்வும் உள்ளிட்டப் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘ வா வாத்தியாரே ‘ படத்தி கார்த்தி தற்போது நடித்து வருகிறார். இப்படம் தவிர்த்து 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கும் மெய் அழகன் படத்திலும்  நடித்து வருகிறார்