கோயிலுக்கு போகாமல் தியேட்டருக்கு போங்க என தான் ஏன் சொன்னேன் என இயக்குநர் மிஷ்கின் விளக்கமளித்துள்ளார். 


சமீபத்தில்  “தி புரூப்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின், கடவுளுக்கு பிறகு நாம் அனைவரும் அண்ணாந்து பார்க்கக்கூடிய விஷயம் சினிமா தான். நான் எல்லா சினிமாவுக்கும் சேர்த்து தான் பேசுகிறேன். பாவம் பண்ணவங்க அல்லது பண்ணப்போகிறவர்கள் தான் தான் கோயிலுக்கு போவாங்க. அதனால் தியேட்டருக்கு போங்க என பேசியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது.   


இதனிடையே இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் , இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா “ஹிட் லிஸ்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின் , “விக்ரமன் சார் படங்களின் டைட்டிலில் எனக்கு புது வசந்தம், வானத்தைப்போல ரொம்ப பிடிச்சது. இந்த மாதிரி டைட்டிலை எங்களால் யோசிக்க முடியுமான்னு தெரியல. நாங்க பழகிய சினிமாக்காரர்களில் அழகாகவும், எளிமையாகவும் இருப்பவர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள் தான். ஒரு குரு இன்னொரு குருவை உருவாக்கி கொண்டேயிருக்கிறது. இந்த வரிசையில் ஹிட் லிஸ்ட் படத்தின் ஹீரோ விஜய் கனிஷ்கா வர வேண்டும். 


நான் ஒரு படத்தில் வேலை செய்யும்போது அதில் சரத்குமார் நடித்தார். துறுதுறுவென நான் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்து அவரிடம் அப்போது இருந்த பெரிய செல்போனை என்னிடம் கொடுத்து பத்திரமாக வைக்க சொல்வார். அவருடனேயே நான் இருந்தேன். அந்த படத்தில் 13 சீன்கள் நான் எழுதினேன். அந்த வகையில் சரத்குமாருக்காக நான் எழுதிய கதைகளில் ஒன்று தான் துப்பறிவாளனாக மாறியது. 


கடந்த மேடையில் நான் தியேட்டருக்கு போங்க. கோயிலுக்கு போகாதீங்க என சொன்னதை சர்ச்சையாக்கி விட்டார்கள். நான் கோயில் என சொன்னது சர்ச், மசூதி எல்லாம் சேர்ந்தது. நான் பிறப்பால் இந்து தான். ஆனால் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, கிறிஸ்தவ பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன்.  


கோயிலுக்கு காலையிலேயே செல்கிறீர்கள். அதேபோல் இன்றைக்கு தியேட்டர் வெறிச்சோடி கிடப்பது தான் நிஜம். ஏன் கோயிலை விட தியேட்டர் முக்கியம் என சொல்கிறேன் என்றால் இரண்டு பேராக உட்கார்ந்து டிவி பார்த்து விடலாம். நிறைய பேர் உட்கார்ந்தால் அது ஒரு கொண்டாட்டம். அப்படி ஒரு கொண்டாட்டம் நடக்கும் இடம் தான் தியேட்டர்” என மிஷ்கின் தெரிவித்துள்ளார். 


ஹிட் லிஸ்ட் படம் 


ஹிட் லிஸ்ட் படத்தில் சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபி நக்‌ஷத்ரா, அபிநயா, சித்தாரா என பலரும் நடித்துள்ளனர். சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.