கோலிவுட்டின் சமீபத்திய பிரம்மாண்ட ஹிட் பொன்னியின் செல்வன் பாகம் 2. இத்திரைப்படம் வெளியான 4 நாள்களில் 200 கோடிகளைக் கடந்து வசூலித்துள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வசூலில் குறைவில்லாமல் இந்த பாகமும் சென்ற பாகத்தைப் போல் வசூலை வாரிக்குவித்து பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கி வருகிறது.


இந்நிலையில் இப்படத்தினை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்துள்ளார் நடிகர் கார்த்தியின் ரசிகை ஒருவர்.  


பொதுவாக கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராகக் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் முதல் நாள் ஷோவுக்கு தான் இம்மாதிரி ஆச்சர்யங்கள் நடக்கும். ஆனால் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெரும் ரசிகர் பட்டாளத்தை தமிழ்நாட்டில் ஏற்கெனவே பெற்ற நிலையில், தற்போது அவரது ரசிகை ஜப்பானில் வருகை தந்து கார்த்தி ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்.


ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) எனும் ரசிகையை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவழைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். 


இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda) கூறியதாவது:
“நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தேன், அப்பொதிலிருந்து, நான் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகை. பொன்னியின் செல்வன் முதல் பாகம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.


பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி வந்தோம். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை பார்த்து மிகவும் என்ஜாய் செய்தேன். மிக அட்டகாசமான படம்” என மகிழ்ந்துள்ளார்.


கார்த்தியை சந்தித்தது குறித்துப் பேசியுள்ள ஜப்பானிய ரசிகை, “மிக சந்தோசமான அனுபவம், ஜப்பான் படப்பிடிப்பில் மிக பிஸியான நேரத்தில் என்னை சந்திக்க ஒப்புக்கொண்டு என்னை வீட்டுக்கு அழைத்தார். அவர் மனைவி கேசரி பரிமாறினார். மிக எளிமையாக என்னிடம் பழகினார். அவருடன் பல விசயங்கள் உரையாடினேன். RRR படம் போல் இந்தப்படத்தையும் ஜப்பானில் பிரமாண்டமாக வெளியிடுமாறு கேட்டேன். ஜப்பானில் தமிழ்ப்படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது படக்குழுவை ஜப்பான் அழைத்து வரக் கோரிக்கை வைத்திருக்கிறேன். 


கார்த்தியின் அடுத்த படம் ஜப்பான் என்ற போது ஆச்சர்யப்பட்டேன். ஆனால் அது ஜப்பான் பற்றிய படமல்ல ஜப்பான் எனும் பெயர் மட்டுமே என்ற போது கொஞ்சம் வருத்தம் தான். ஜப்பான் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். ஜப்பானை வைத்து தமிழ் படங்கள் வர வேண்டும் என்றார்.