விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியாத நிகழ்வு என் வாழ்நாள் முழுவதும் ஒரு குறையாவே இருக்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் பொதுமக்களிடையே மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இப்படியான நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு முன்னணி பிரபலங்கள் சிலர் நேரில் வர முடியாத அளவுக்கு வெளிநாட்டிற்கு சென்றிருந்தனர். அவர்கள் வீடியோ, சமூக வலைத்தள பதிவு மூலமாக இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் நேற்று சென்னை திரும்பிய நடிகர் கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் ஆகிய இருவரும் சிவகுமார் இன்று காலை விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்தனர். அங்கு சூடம் ஏற்றி விஜயகாந்தை இருவரும் வணங்கி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி, “கேப்டன் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவர் நம்ம கூட இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரோட இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியவில்லை. இந்த நிகழ்வு என் வாழ்நாள் முழுவதும் ஒரு குறையாவே இருக்கும். கேப்டன் கூட எனக்கு நெருங்கி பழக வாய்ப்பு கிடைச்சது இல்ல. ஆனால் நான் சின்ன பையனா இருக்கும் போது தி.நகர் டேனியல் தெருவுல எப்போதும் சாப்பாடு போட்டுக்கிட்டே இருப்பாரு.
யார் வேண்டுமானாலும் போய் சாப்பிடலாம்ன்னு சொல்வாங்க. அவரோட படங்கள் ரொம்ப பிடிக்கும். விஜயகாந்த் போலீசா நடிச்ச படங்களை பத்து தடவையாவது போய் பார்ப்பேன். நடிக்க வந்த பிறகு, நடிகர் சங்க தேர்தலில் ஜெயிச்ச பிறகு கேப்டனை நேரில் போய் பார்த்தேன். அவ்வளவு சந்தோசமா பார்த்தார். நடிகர் சங்கத்தில் பெரிய சவால்களை சந்திக்கும் போதெல்லாம் அவரை தான் நினைப்போம். ஒரு தலைவன் என்றால் முன்னாடி நின்னு வழி நடத்தணும், இறங்கி வேலை செய்யணும்ன்னு அவரை பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
எல்லா பிரச்சினைளையும் முன்னாடி நின்னு வேலை செஞ்சது பெரிய ஆச்சரியமா இருக்குது. பெரிய ஆளுமை நம்ம கூட இல்லைன்னு நினைக்குறது பெரிய வருத்தமா இருக்கு. விஜயகாந்த் எங்க மனசுல எப்போதும் இருப்பாரு. வரும் 19 ஆம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பில் விஜயகாந்துக்கு காமராஜர் அரங்கில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்குது. அவரது புகழ் எப்போதும் நிலைக்குற மாதிரி, நாங்க செய்யிற விஷயமும் சரி, நடிகர் சங்கமும் விஷயமும் சரி அரசு கிட்ட வைக்க கோரிக்கைகள் எல்லாம் இருக்கு. கேப்டன் புகழ் எப்போதும் இருக்கும். நிறைய எல்லாருக்கும் கொடுத்திருக்காரு.அந்த அன்பு தமிழ்நாடு முழுவதும் இருக்கு. அவரோட குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.