திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையிட்ட இடங்களிலெல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் திரைப்படத்தை அறிவித்தபோது சில வேலைகள் சந்தோஷத்தை தரும். சில வேலைகள் கௌரவத்தையும் பெருமையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமை தேடித் தரும் என்று சொன்னேன். அமரன் அடைந்திருக்கும் வெற்றி மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள் எனும் நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் சிந்திய ரத்தத்திற்கும் அவரது அன்புக்குரியவர்கள் சிந்திய கண்ணீருக்குமான எங்களின் எளிய காணிக்கைதான் இந்த அமரன். இது தனியொரு நபரின் சரிதை மட்டுமல்ல. இந்திய நிலப்பரப்பை காக்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் கதையும் தான்.
மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் தம்பி சிவகார்த்திகேயன். இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. அவரது முழுமையான பங்களிப்பும் உழைப்பும் திரை ரசிகர்களால் நீண்ட காலத்துக்கு போற்றப்படும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்.
மேஜரின் காதல் மனைவி இந்து வர்கீஸ் இந்த தேசமே போற்றிய இரும்பு பெண்மணி. அவரது பாத்திரமாகவே மாறியிருக்கிறார் சாய்பல்லவி. அவர் இப்படத்திற்கு பெரும் பலம். இசையால் உயிரூட்டியிருக்கிறார் ஜி.வி. ஒரு மகத்தான மாவீரனின் சரிதையை படமாக எடுப்பது எளிதான காரியம் அல்ல. விரிவான ஆய்வுகள், களப்பணிகள் செய்து தரவுகளை திரட்டி அவற்றை தொகுத்து சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
ஒரு நல்ல திரைப்படம் என்பது தனிக்கனவு அல்ல. மொத்த அணியும் நன்மையில் நம்பிக்கை வைத்து உழைக்க வேண்டிய பொதுக்கனவு. தன்னைத் தந்து மண்ணைக்காத்த தமிழ் வீரனுக்கான சிறந்த சமர்ப்பணமாகவும் நாமறியாத ராணுவ வாழ்க்கையை அவர்களின் குடும்பத்தார் செய்யும் தியாகங்களை மக்கள் அறிந்து கொள்ள கூடிய படமாகவும் அமரன் அமைந்ததில் நானும் எனது சகோதரர் ஆர். மகேந்திரனும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.