தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு அனைத்து துறைகளிலும் அதீத வளர்ச்சியை தந்துள்ளது. வங்கி சேவையிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது பணப்பரிவர்த்தனை உள்பட பல சேவைகளில் பயனாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது.
UPI பணப்பரிவர்த்தனை:
கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது போல UPI ஐடி மூலமாகவும் பணப்பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணப்பரிவர்த்தனை செய்வதற்கு இந்த UPI ID மிகவும் உதவிகரமாக அமைகிறது.
இந்த UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறை கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் இந்த முறை மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனையும், பணப்பரிவர்த்தனையின் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த அக்டோபர் மாதம் UPI மூலம் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
புதிய உச்சம்:
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 16.58 பில்லியன் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அக்டோபர் மாதம் UPI மூலமாக 23.5 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டடது முதல் ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு பணப்பரிவர்த்தனை நடைபெறுவது இதுவே முதன்முறை ஆகும்.
இந்த தகவலை தேசிய பேமேண்ட்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா பகிர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் தொகை அதிகரித்துள்து என்றும். பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை 10 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு:
செப்டம்பர் மாதத்தில் ஒருநாளில் அதிகபட்சமாக 68 ஆயிரத்து 800 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றது. அன்றைய நாளில் 501 மில்லியன் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றது. ஆனால், அக்டோபர் மாத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 75 ஆயிரத்து 801 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் உடனடி பணப்பரிவர்த்தனை சேவையான ( IMPS) 467 மில்லியன் நடைபெற்ற நிலையில், அக்டோபர் மாதத்தில் 467 மில்லியன் அளவிற்கு நடைபெற்றுள்ளது. மேலும் பாஸ்டேக் பணப்பரிவர்த்தனையும் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த அக்டோபர் மாதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது 14 முதல் 19 சதவீதமாக இருந்த நிலையில், 2024ம் ஆண்டு 40 முதல் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு UPI பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை 51.9 பில்லியனாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 78.97 பில்லியனாக உயர்ந்துள்ளது.