பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த கே.விஸ்வநாத் ஸ்டுடியோ ஒன்றில் சவுண்ட் இன்ஜீனியராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நிலையில், இயக்குநராகும் எண்ணத்தில் தெலுங்கு இயக்குநர் அதுர்தி சுப்பாராவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின்னர் 1965 ஆம் ஆண்டு ஆத்ம கௌரவம் என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களை இயக்கிய அவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கே.விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டது. 






நடிகராக குருதிப்புனல், முகவரி,யாரடி நீ மோகினி, உத்தமவில்லன், லிங்கா,ராஜபாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் இயக்கிய படங்களில் சங்கராபரணம், சாகர சங்கமம், ஸ்வாதி முத்யம் ஆகியவை 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


இதில் கமல்ஹாசன் தெலுங்கில் நடித்த சாகர சங்கமம் படம் தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. கமலில் சினிமா கேரியரில், மிக முக்கியமான படமான இப்படம் 3 ஃபிலிம்பேர் விருதுகள், 2 நந்தி விருதுகள், 3 தேசிய விருதுகளை வென்றது. இதேபோல் ஸ்வாதி முத்யம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்னும் பெயரில் டப் செய்யப்பட்டது. 






தற்போது 92 வயதான கே.விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக, திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கே.விஸ்வநாத்தை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் மாஸ்டர் கே. விஸ்வநாத் சாரை அவரது வீட்டில் சந்தித்தேன்.நிறைய நினைவுகளும் மரியாதையும்!! என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் கமல்ஹாசன் கே.விஸ்வநாத்தின் கைகளை பிடித்து கண்களால் தொட்டு வணங்கும் வகையில் உள்ளது.