தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நவ.26-ம் தேதி தொடங்குகின்றன. வட்டத்துக்கு ஒரு மையம் என்ற வீதத்தில் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  


நீட் பயிற்சி:


தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு மாநில அரசு சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்க காலத்தில் இணையம் மூலம் ஆன்லைன் பயிற்சி நடத்தப்பட்டது.  


அது எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்கள் மத்தியில் வெற்றியைப் பெறவில்லை. அதேபோல, கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து நேரடி முறையிலான நீட் பயிற்சி வகுப்புகள் மீண்டும் இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளன. . முதல் கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி முதல்  பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 26 ஆம் தேதி நீட் வகுப்புகள்தொடங்க உள்ளன. 


அரசுப்பள்ளி மாணவர்கள்:


வட்டத்துக்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு  412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  சென்னையில் மட்டும் 13 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த வகுப்புகளில் 1500 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.


வகுப்புகளில் பங்கேற்க பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர்  மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


எங்கே, எப்போது, எப்படி வகுப்புகள்?


ஒவ்வொரு மையத்திலும் அரசு, அரசு உதவி பள்ளிகளில் இருந்து 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். ஒரு மையத்துக்கு 70 பேர் வீதம் மொத்தம் 28,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 


ஆசிரியர்களுக்கு பயிற்சி


அனைத்து மாவட்டங்களிலும் நீட் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பாடக் குறிப்புகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளன. 




சென்னையில் எங்கே பயிற்சி வகுப்புகள்?


சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஜி.கே.எம். காலனி அரசுப் பள்ளி, கோடம்பாக்கம் அரசுப் பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் பயிற்சி நடைபெற உள்ளன.


முன்னதாக 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும்,  அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. மருத்துவம் படிக்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இந்த அளவுக்கு தாமதம் செய்வது கவலையளிக்கிறது என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியானது  குறிப்பிடத்தக்கது.