இயல்பு நிலைக்கு திரும்பும் இரு நாட்டு மக்கள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை கதிகலங்க வைத்தது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா. இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற பாகிஸ்தான், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால், இஸ்ரேல், ரஷிய மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் முயற்சியை இந்தியா முறியடித்தது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, மோதலை நிறுத்தி கொள்வதாக இரண்டு நாடுகளும் அறிவித்தன.
போர் பதற்றத்தில் இரவு பகலாக பீதியில் இருந்த எல்லைபுற மக்கள் தற்போது மறுபடியும் தங்கள் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு பெரிய வெற்றியாகவே நாட்டுமக்களால் பார்க்கப் படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் தாக்குதலால் பெரியளவில் உயிரிழப்பும் பொதுசொத்து சேதமும் இல்லாமல் இந்தியா பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்திய ராணுவம் மற்றும் இந்திய அரசை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் .
இந்திய அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு
"துப்பாக்கிகளின் சத்தம் ஓய்ந்து அமைதி நிலவும் இந்த தருணத்தில் நாம் நிம்மதியுடன் இருக்க தங்கள் உயிரைக் கொடுத்தவர்களை இந்த தருணத்தில் நினைவுகொள்வோம். கடமையுணர்வோடு ஆபத்தின் முன் துணிச்சலாக நின்று எல்லையில் நம்மை பாதுகாத்த இந்திய ராணுவத்தை வணங்குகிறேன். ஜம்மு காஷ்மீர் , பஞ்சாப் , குஜராத் , ராஜஸ்தான் மக்கள் தலை நிமிர்ந்து நின்றீர்கள். உங்களுடன் இந்த தேசமும் பெருமையாக நின்றது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஒற்றுமையை நாம் பார்த்துள்ளோம். இனம் , மொழி, கொள்கைகள் கடந்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்றிருக்கிறோம். துரிதமாக செயல்பட்டு இந்தியா எப்போதும் தீவிரவாதத்தின் முன் பனியாது என்பதை உணர்த்திய இந்திய அரசை பாராட்டுகிறேன். இந்த தருணத்தை பலமான ஒரு இந்தியாவை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் . இது வெற்றிக் கொண்டாட்டத்திற்கான நேரமில்லை. ஒரு பலமான நாடு என்பது சிந்திக்கும் நாடும் கூட. இந்த வெற்றியை நமது பாதுகாப்பை இன்னும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும். "
ஜெய் ஹிந்த் - கமல்ஹாசன் " என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்