அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்ட வர்த்தகப் போர், அவ்விரு நாடுகளை மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இரு நாடுகளும் சிறியதாக ஆரம்பித்து, படிப்படியாக வரிகளை உயர்த்திக்கொண்டே போன நிலையில், சீனா மீது அமெரிக்கா அதிகபட்சமாக 245 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியையும் விதித்திருந்தன. இந்நிலையில், தற்போது இந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே உச்சகட்டத்தை அடைந்த வர்த்தகப் போர்
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப்பால், சீனாவிற்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 34% வரியை விதித்தது சீனா. மேலும், பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய கட்டுப்பாடுகளையும், சில நிறுவனங்களுக்கு தடையையும் விதித்தது.
இதைத் தொடர்ந்து, சீனா அறிவித்த வரியை ஏப்ரல் 8-க்குள் திரும்பப்பெறாவிட்டால், அந்நாட்டிற்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும், அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு, மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்தார். ஆனாலும் அசராத சீனா, ட்ரம்ப் கூடுதல் வரியை விதித்தால், தாங்களும் அதற்கு பதில் வரி விதிப்போம் என எச்சரித்தது.
இதையடுத்து, ட்ரம்ப் உத்தரவுப்படி, சீனாவிற்கான வரி 104%-ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான வரியை 84%-ஆக உயர்த்தியது சீனா. இதைத் தொடர்ந்து, சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டிற்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப். அதோடு, மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததுடன், சீனாவை தவிர மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் செயல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்றும், தாங்களும் வரியை மேலும் உயர்த்துவோம் என்றும் சீனா அறிவித்தது.
இதையடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் கடுப்பான ட்ரம்ப், சீனாவின் பல பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மேலும் 100 சதவீதம் உயர்த்தியதையடுத்து, வரி விதிப்பு 245 சதவீதமானது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியது. மேலும், இது உலகளாவிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கும் காரணமானது.
அமெரிக்கா - சீனா இடையே முடிவுக்கு வந்த வர்த்கப் போர்
அமெரிக்கா - சீனா இடையே உச்சகட்ட வர்த்தகப் போர் இருந்துவந்த நிலையில், வரி குறைப்பு குறித்து பேச சீன அதிபர் தன்னை அழைத்ததாக ட்ரம்ப் தெரிவித்து, அதை சீனா மறுத்தது. இந்நிலையில், சமீபத்தில் இரு நாடுகளும் வரி குறைப்பு பற்றி பேசுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இந்த நிலையில், தற்போது இரு நாடுகளும் பரஸ்பர வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் கடந்த 2 நாட்களாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், வர்த்தகப் பிதிநிதி ஜேமிசன் க்ரீர் உள்ளிட்ட அமெரிக்க குழுவினருக்கும், சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் தலைமையிலான அந்நாட்டு குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு எட்டப்பட்டதாக ஸ்காட் பெசன்ட் நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி, இரு நாடுகளும் பரஸ்பர வரியை 90 நாட்கள் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சீன பொருட்கள் மீதான வரியை, 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்க சீனா முன்வந்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர், அவ்விருநாடுகளை மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது, உலக நாடுகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.