மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீக்குளித்த நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற தலைமை காவலரின் கைகளிலும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உறவினருக்கு கடனாக கொடுத்த தங்க நகைகள் 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் சரகம், சேந்தங்குடி, மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் கலைசெல்வன். இவர் கடந்த 2016 -ஆம் ஆண்டு தனது மனைவி கயல்விழி என்பவரின் உடன்பிறந்த அக்காவின் மகன் மயிலாடுதுறை, அவையாம்பாள்புரம், காவேரிகரை தெருவை சேர்ந்த தர்மராஜ் என்பவரிடம் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணமும் கடனாக கொடுத்துள்ளார்.

கடனை திருப்பி தராமல் இழுத்தடிப்பு 

ஆனால், தர்மராஜ் தான் பெற்ற கடனை கலைசெல்வனிடம் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கலைச்செல்வன் தனது மகளின் திருமண செலவிற்காக தான் கடனாக கொடுத்த தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை தன்னிடம் திருப்பி கொடுக்கும்படி தர்மராஜிடம் பலமுறை கேட்டும், கடன் பெற்ற பொருட்களை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

15 சவரனில் பதில் 3 சவரன் நகை

இந்த பிரச்சினை தொடர்பாக உறவினர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் தர்மராஜ் கடனை திருப்பி கொடுக்காததால் கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இம்மனு தொடர்பாக மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தர்மராஜ் மேற்படி கலைசெல்வனிடம் இருந்து தான் கடன் பெற்றது உண்மையென்றும், ஆனால் தற்போது தன்னால் முழு தொகையையும் திருப்பி கொடுக்கும் வசதியில்லாததால் 3 சவரன் தங்க நகைகளை தற்சமயம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கலைசெல்வனுக்கு 3 சவரன் தங்க நகைகள் பெற்று தரப்பட்டுள்ளது. 

விசாரணைக்கு அழைப்பு 

அதனை அடுத்து மேல் விசாரணைக்காக இன்று மாலை இருதரப்பினரையும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆஜராக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகளின் திருமண செலவு அவசரம் காரணமாக மேற்படி கலைசெல்வன் மீதமுள்ள சொத்துக்களை உடனடியாக பெற்று தர கூறி நேற்று மாலை மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு கையில் பெட்ரோலுடன் வந்துள்ளார். அப்போது மயிலாடுதுறை காவல் நிலைய பாரா காவலர் ராஜா என்பவர் வாக்கிடாக்கியில் மூலம் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை பெற்றுக் கொண்டிருந்துள்ளார். 

காவல்நிலையத்தில் தீக்குளிப்பு 

இந்நிலையில் மேற்படி கலைசெல்வள் தான் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தீ பற்ற வைத்துக் கொண்டார். சம்பவத்தைக் கண்ட பாரா காவலர் ராஜா மேற்படி கலைசெல்வனை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இச்சம்பவத்தில் கலைசெல்வனுக்கு தோள்பட்டைகள் மற்றும் கழுத்தின் பின்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கலைச்செல்வனை மீட்க சென்ற காவலர் ராஜா என்பவருக்கு இரண்டு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முதலுதலி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மயிலாடுதுறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விசாரணை 

பரபரப்பான இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வெளியே வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எஸ்.பி. விசாரணை 

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக கலைச்செல்வன் கடந்த மாதம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும், அந்த பணத்தில் ஒரு பகுதி தொகையை திரும்ப அவர் பெற்றுவிட்டதாகவும், இது குறித்து விசாரணைக்கு இரண்டு நாட்களில் அவரை வரச் சொல்லி இருந்த நிலையில், திடீரென இன்று காவல் நிலையத்துக்கு வந்த கலைச்செல்வன் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், கலைச்செல்வன் 30 சதவீத தீக்காயங்களும் காப்பாற்ற சென்ற ராஜா 15 முதல் 20 சதவீதக் காயம் அடைந்ததாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் காவல்நிலைய வாசலில் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‌