கமல் கேரியரில் இந்த காலத்து ரசிகர்களையும் கவர்ந்த படங்களில் ஒன்றான சகலகலா வல்லவன் படம் வெளியாகி இன்றோடு 41 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது


சினிமாவில் எதுவும் இங்கு 100 சதவீதம் யாருடைய எண்ணங்களையும் பூர்த்தி செய்யாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து பிடிக்கும், பிடிக்காமல் போகும். ஆனால் இன்றைய காலத்தில் லாஜிக் பார்த்து படம் கொடுக்கும் பொழுதுபோக்கை மிஸ் செய்கின்றனர் ரசிகர்கள். ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்து கமர்ஷியல் படமாக வெளியானது ‘சகலகலா வல்லவன்’.


ஏவிஎம் - எஸ்பி முத்துராமன் கூட்டணி  


1982 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் வெளியானது. கமர்ஷியல் கிங் என பெயரெடுத்த எஸ்.பி.முத்துராமன் இந்த படத்தை இயக்கியிருந்தார். கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன், அம்பிகா, ரவீந்திரன், துளசி,  தேங்காய் சீனிவாசன்,  வி.கே.ராமசாமி,  ஒய்.ஜி.மகேந்திரன்,  சில்க் ஸ்மிதா என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வி.கே.ராமசாமி மனைவி புஷ்பலதா. இவரது மகன் ரவீந்தருக்கும், மகள் அம்பிகாவுக்கு அதிகாரமாக நடக்கின்றனர். அந்த வீட்டில் வி.கே.ராமசாமி மட்டும் நேர்மையாக இருப்பார். அதேசமயம் கோயில் பூஜையில் புஷ்பலதாவுடன் கமலுக்கு மோதல் ஏற்படும். இதனால் அவரை பழிவாங்க ரவீந்தர் முடிவு செய்து கமலின் தங்கை துளசியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விடுவார். இது தெரிந்து நியாயம் கேட்க சென்ற இடத்தில் ரவீந்தர் கமலை அவமானப்படுத்துவார். சபதம் ஏற்று பல டிராமாக்கள் செய்து ரவீந்தருக்கும், துளசிக்கும் திருமணம் செய்து வைப்பதே இப்படத்தின் கதையாகும்.


படம் நெடுக காமெடி சரவெடி 


குடுமியும் முறுக்கு மீசையும் என கமல், அம்பிகாவிடம் வம்பு செய்யும் காட்சிகள் இப்போது பார்த்தாலும் ரசிக்க வைக்கும். தேங்காய் சீனிவாசனிடம் வி.கே.ஆர். சொல்லும் வசனங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பஞ்சு அருணாசலத்தின் வசனம் பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம். ஜூடோ ரத்தினம் மாஸ்டரின் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கும். 


சகலகலா வல்லவன் இளையராஜா


உண்மையில் எல்லாவற்றையும் விட இப்படத்தின் சகலகலா வல்லவன் இசையமைப்பாளர் இளையராஜா தாம். கட்டவண்டி கட்டவண்டி கடையாணி கழண்ட வண்டி என அம்பிகா, கமலுக்கு தனித்தனியாக பாடல்,  நிலா காயுது நேரம் நல்ல நேரம், நேத்து ராத்திரி யம்மா என தூக்கம் கெடுத்த பாடல்களை கொடுத்து விருந்து படைத்திருப்பார். இளையராஜா மேல்நாட்டு பாணியில் இசையமைத்த ‘இளமை இதோ இதோ’ பாடல் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு பிறக்காது. கிட்டதட்ட 4 தசாப்தங்களுக்கும் மிகவும் பரீட்சையமாக அந்த பாடல் உள்ளது.