பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நூறாவது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹிட் பிலிம்ஸ்ஸின் 100வது படத்தில் நடிகர் விஜய்-ஐ நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான தளபதி 67 திரைப்படங்கள் முடித்த பின்னர், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பது உறுதி!
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் நடிகர் ஜீவா. நடிகர் ஜீவாவின் சர்க்கார் கேம்ஸ் ஷோ விரைவில் ஆஹா தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது ஊடகத்தினரை சந்தித்த நடிகர் ஜீவா சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நூறாவது திரைப்படம் குறித்து பேசி உள்ளார். இந்த நிறுவனத்தின் நூறாவது திரைப்படத்தில் நடிகர் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதை நடிகர் ஜீவா உறுதி செய்துள்ளார்.
ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி நடிகர் விஜய்யை கடந்த வாரம் சந்தித்து பேசியதாகவும், நூறாவது திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஜீவா கூறினார். மேலும் தன் தந்தையிடம் அந்த திரைப்படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு ஜீவா கேட்டதாகவும், சம்பளம் இல்லாமல் அந்த படத்திற்கு நடித்துக் கொடுப்பதில் தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்ததாகவும் நகைச்சுவையாக கூறியுள்ளார் நடிகர் ஜீவா. இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய்யும் ஜீவாவும் இணைந்து நடித்த திரைப்படம் நண்பன். இதனைத் தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ்ஸின் நூறாவது திரைப்படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.