ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் இடையே உயர்கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. அப்போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலை, அறிவியல் கல்லூரிகளிலும் புது பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாடு இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, ’’நான் முதல்வன் திட்டத்தில் என்ன மாதிரியான பாடத்திட்டம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், கல்லூரி பேராசிரியர்கள் அவற்றை தெரிந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகம் - மெல்போர்ன் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்
அதேபோல சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் சென்னை பல்கலைக்கழகம் - மெல்போர்ன் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழக மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இன்று சென்னை பல்கலைக்கழகம் - மெல்போர்ன் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு மாணவர்களும் சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும்.
வேலை வாய்ப்பை அதிகரிக்க இது போன்ற புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இனிவரும் நாட்களில் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் அரசின் பங்கு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். சென்னை பல்கலைக்கழகம் மட்டும் அல்லாமல், வரும் காலங்களில் பிற பல்கலைக்கழகங்களும் இவர்களுடன் கையெழுத்திடுவர்கள் என்று நம்புகிறேன்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தை எப்படி அறிமுகம் செய்வது, அதை நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் எப்படிக் கற்பிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிற பிராந்தியங்களிலும் இந்தக் கூட்டம் நடைபெறும்.
வெகு விரைவில் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.''
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக 20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த பொறியியல் பாடத்திட்ட மாற்றம் நடப்புக் கல்வியாண்டிலேயே (2022- 23) அமலாகி உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இதில், புதிதாக தமிழர் மரபு, அறிவியல் தமிழ் உட்பட 5 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், Professional Development, English Lab, Communication lab / Foreign Language ஆகிய 5 புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில், தமிழர் மரபு (Scientific Thoughts in Tamil), அறிவியல் தமிழ் (Heritage of Tamils) ஆகிய துறைகளில் எழுத்துத் தேர்வுகளும் Professional Development, English Lab, Communication lab / Foreign Language ஆகிய துறைகளில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.