திரையுலகில் எண்ட்ரி ஆக, சில ஃபார்மட் உள்ளது. ஒன்று, வாரிசு நடிகராக இருக்க வேண்டும். அல்லது, படத்தை உருவாக்கும் பணம் படைத்தவராக இருக்க வேண்டும். இந்த இரண்டு தான், எளிதில் எண்ட்ரி தரும் விசயங்கள். மற்றவர்கள் அனைவரும், போராடி தான் சினிமாவில் ஜெயிக்கின்றனர். நாம் பார்க்கப் போவது, முதல் ரகத்தை சேர்ந்தவர். பிரபல சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன், ஜீவா.
ஆனால், அதில் ஒரு திருத்தம் இருக்கிறது. எண்ட்ரி வேண்டுமானால், தந்தையின் தயவில் நடந்திருக்கலாம். ஆனால், அதன் பின் அவர் வளர்ச்சி, சுயம்பாகவே இருந்தது. ஏன், இதை இவ்வளவு அழுத்தமாக சொல்கிறோம் என்றால், அதே குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகரும் வந்தார். ஆனால், அவர் ஜீவா அளவிற்கு ஜொலிக்கவில்லை. ஒரு வேளை ஜீவா, அவரது தந்தையால் தான் ஜொலித்தார் என்றால், அவரது அண்ணன் ஜித்தன் ரமேஷூம் ஜொலித்திருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. இதிலிருந்து, ஜீவாவின் வளர்ச்சியில் அவரது பங்கு மட்டுமே இருந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
2003ல் ஆசை ஆசையாய், தித்திக்குதே படங்களில் எண்ட்ரி கொடுத்த ஜீவா, தமிழ்நாட்டில் தட்டுப்பாடாக இருந்த ‛ப்ளே பாய்’ இடத்தை நிரப்ப மெனக்கெட்டார். அப்படி போவார் என்று எதிர்பார்த்த சமயத்தில், மூன்றாவது படமாக 2005 ல் ராம் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம், நடிகனாக அடையாளப்படுத்தியது. அதே ஆண்டில் டிஷ்யூம், 2006ல் ஈ என ஜீவாவுக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள்.
2007 ல் கற்றது தமிழ், ராமேஸ்வரம் என சீரியஸ் ஜானரில் ஜீவா பயணிக்கத் தொடங்கினார். ஆண்டுக்கு ஒரு ஹீட் என்கிற பார்மட், அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. தொடர்ந்து சினிமாவில் தன்னை தக்க வைக்கவும் உதவியது. 2009 ல் சிவா மனசுல சக்தி, ஜனரஞ்சகமான நடிகராக ஜீவாவை மேம்படுத்தியது. கோ, ரவுத்திரம், நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட் என அடுத்தடுத்து படங்கள் அடுக்கடுக்காய் அதிகரித்துக் கொண்டே சென்றது.
ஒரே மாதிரி இல்லாமல், பல மாதிரியாய் படங்களை தேர்வு செய்து அதில் அர்ப்பணிப்பாய் அடையாளப்படுத்தப்பட்டார் ஜீவா. 2003ல் அவருடன் அறிமுகம் ஆன எத்தனையோ பேர், இன்று சீனில் இல்லை. ஏன், நேற்று வந்தவர் கூட இன்றில்லை. இந்த காலகட்டத்தில் சினிமா எத்தனையோ பரிமாணத்தை கடந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் எல்லாம், தன்னை அதற்குள் அடைத்துக் கொண்டவர் ஜீவா. அதனால்தான், இந்த திரையுலகத்தில் அவரால் பயணிக்க முடிந்தது.
இன்று நடிகர் ஜீவாவின் 38-வது பிறந்தநாள். 84-இல் பிறந்த அவர், 83-இல் நடித்து கிரிக்கெட் உலகில் இந்தியாவின் வரலாற்று சாதனையை நினைவூட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் மொழிகளில் வெளியான 83 திரைப்படம், வசூலிலும், பார்வையாளர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. இதே பல ஜீவாவும் பாராட்டுகளை தொடர்ந்து பெற வாழ்த்துகிறது ஏபிபி நாடு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்